ரவுடி என்கவுண்டர் திமுக அரசின் நாடகம்- சீமான்

உண்மை குற்றவாளிகளை தப்ப வைப்பதற்காகவே விசாரணை கைதி திருவேங்கடம் கொலை.காவல்துறையினர் பாதுகாப்பில் இருந்த விசாரணை கைதி சுட்டுக்கொல்லப்பட்டது எப்படி?
ரவுடி என்கவுண்டர் திமுக அரசின் நாடகம்- சீமான்
Published on

சென்னை:

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட விசாரணைக் கைதி திருவேங்கடம், சென்னை- மாதவரத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

காவல் துறையினர் பாதுகாப்பில் இருந்த விசாரணை கைதி சுட்டுக் கொல்லப்பட்டது எப்படி? முக்கியமான அரசியல் தலைவரின் படுகொலையில் தொடர்புடைய குற்றவாளியின் பாதுகாப்பில் காவல்துறை அலட்சியமாக இருந்தது எப்படி?

இந்திய அளவிலான கட்சியின் மாநிலத்தலைவரின் படுகொலையைத் தான் தடுக்க முடியவில்லை. குறைந்தபட்சம் அதில் சரணடைந்த விசாரணை கைதியையும் காப்பாற்ற முடியவில்லை என்பது வெட்கக்கேடானது. வன்மையான கண்டனத்துக்குரிய இந்நிகழ்வு தி.மு.க. ஆட்சியில் காவல்துறை எந்த அளவிற்கு திறனற்றதாகி உள்ளது என்பதையும், தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு எவ்வளவு மோசமாக சீரழிந்துள்ளது என்பதையுமே காட்டுகிறது.

உண்மையை மூடி மறைப்பதற்காக காவல்துறையினரே போலியாக துப்பாக்கிச் சூடு நடத்தியது பல வழக்குகளில் மெய்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரண் அடைந்தவர்கள் குற்றவாளிகள் அல்ல என்ற சந்தேகம் தற்போது விசாரணை கைதி திருவேங்கடம் கொல்லப்பட்டிருப்பதன் மூலம் அதிகமாகிறது.

ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் இரண்டு தி.மு.க. நிர்வாகிகள் விசாரணைக்கு உட்பட்டிருக்கும் நிலையில், உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டுமென்று ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினர் உட்பட அனைவரும் வலியுறுத்தி வந்த நிலையில், விசாரணை தொடங்கும் முன்பே நடத்தப்பட்டு உள்ள இத்துப்பாக்கிச் சூடு உண்மைக் குற்றவாளிகளை தப்பிக்க வைப்பதற்காக தி.மு.க. அரசு நடத்திய நாடகம்தான் இப்படுகொலையோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

ஆகவே, மனித உரிமைகள் ஆணையமும், மாட்சிமை பொருந்திய நீதிமன்றமும் விசாரணை கைதி திருவேங்கடம் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது குறித்து தீர விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொணர வேண்டும்.

உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com