கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டு ஜெயிலுக்கு அழைத்து வந்த போது தப்பிய கொள்ளையன் கைது

பஸ்சில் இருந்த தாலிப் ராஜா திடீரென பஸ் ஜன்னல் வழியாக ஏறி குதித்து தப்பினார்.தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.
கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டு ஜெயிலுக்கு அழைத்து வந்த போது தப்பிய கொள்ளையன் கைது
Published on

கோவை:

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அடுத்த வேல்வார் பேட்டையை சேர்ந்தவர் தாலிப் ராஜா(28).

இவர் கடந்த ஆண்டு திருப்பூர் மாவட்டத்தில் 2 செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டார். இது தொடர்பாக திருப்பூர் தெற்கு, நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட தாலிப் ராஜாவை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

இந்நிலையில், கோவை மத்திய ஜெயிலில் உள்ள தாலிப் ராஜாவை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக கடந்த 7-ந் தேதி திருப்பூர் போலீசார் கோவைக்கு வந்தனர். மத்திய ஜெயிலில் இருந்து தாலிப் ராஜா மற்றும் மற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என 4 பேரை திருப்பூருக்கு பஸ்சில் அழைத்து சென்றனர்.

அங்கு கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டு 4 பேரையும் மீண்டும் பஸ்சில் கோவைக்கு அழைத்து வந்தனர்.

பஸ் சிங்காநல்லூர் அருகே உள்ள இருகூர் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது பஸ்சில் இருந்த தாலிப் ராஜா திடீரென பஸ் ஜன்னல் வழியாக ஏறி குதித்து தப்பினார்.

போலீசார் உடனடியாக சிங்காநல்லூர் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசாரும் அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து அவரை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இன்று காலை கோவை பகுதியில் பதுங்கி இருந்த அவரை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com