மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு 50 ஆயிரம் கனஅடியாக குறைப்பு

கர்நாடகாவில் மழை பொழிவு குறைந்ததால் நீர்வரத்து குறைந்து காணப்படுகிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது.
மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு 50 ஆயிரம் கனஅடியாக குறைப்பு
Published on

சேலம்:

கர்நாடகாவில் பெய்த மழையின் காரணமாக அங்குள்ள கிருஷ்ண ராஜ சாகர், கபினி அணைகள் நிரம்பியது. இதையடுத்து உபரிநீர் தமிழக காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது. இதன் காரணமாக நீர்வரத்து அதிகரித்து மேட்டூர் அணை கடந்த 30-ந் தேதி மாலை 6 மணி அளவில் 120 அடியை எட்டியது. இதையடுத்து அணைக்கு வரும் உபரிநீர் அப்படியே காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 7-வது நாளாக 120 அடியில் நீடித்து வருகிறது.

இந்த நிலையில் கர்நாடகாவில் மழை பொழிவு குறைந்ததால் நீர்வரத்து குறைந்து காணப்படுகிறது. கிருஷ்ண ராஜசாகர் அணைக்கு இன்று வினாடிக்கு 34 ஆயிரத்து 29 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

அணையில் இருந்து வினாடிக்கு 33 ஆயிரத்து 454 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 123.14 அடியாக இருந்தது. இதே போல் கபினி அணைக்கு வினாடிக்கு 12 ஆயிரத்து 225 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரத்து 542 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 82.35 அடியாக இருந்தது. இந்த 2 அணைகளில் இருந்தும் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 36 ஆயிரத்து 996 கன அடியாக குறைக்கப்பட்டது.

இதன் காரணமாக மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து குறைந்து வருகிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 73 ஆயிரத்து 330 கனஅடியாக நீர்வரத்து இருந்தது. இதையடுத்து உபரிநீர் வினாடிக்கு 70 ஆயிரம் வீதம் திறக்கப்பட்டது. பின்னர் காலை 9 மணியளவில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டு வெளியேற்றப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com