தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு-அமைச்சர் அருண்ராஜ்

தேசிய மருத்துவ மாணவர் சேர்க்கை குழு (எம்.சி.சி) வெளியிட்டுள்ள கால அட்டவணைப்படி, வரும் 13ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை முதல் சுற்றுக் கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது.
MBBS-BDS course
Published on

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் ஆகிய இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் நாளை (ஆகஸ்ட் 10) வெளியாகும் என சுகாதாரம், மருத்துவக்கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அருண்ராஜ் அறிவித்துள்ளார். இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் வழங்கப்படும் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் ஆகிய மருத்துவப் படிப்புகளின் சேர்க்கை இளநிலை நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறுகிறது.

அந்த வகையில், தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் அரசின் ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 2026-2027ஆம் கல்வியாண்டில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மருத்துவப் படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள் கடந்த ஜூலை 23ஆம் தேதி வரை பெறப்பட்டது. மாணவர்களின் கோரிக்கையை ஏற்று ஜூலை 26 முதல் 27 வரை ஒரு நாள் மட்டும் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி, இந்த கல்வியாண்டில் மருத்துவப் படிப்பில் சேர்க்கை பெற 16,199 இடங்களுக்கு 72,627 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

நாளை வெளியாகிறது

மாணவர்கள் விண்ணப்பித்தபோது பதிவேற்றம் செய்த சான்றிதழ்கள் தமிழ்நாடு மருத்துவ மாணவர் சேர்க்கை குழுவின் மூலம் சரிபார்க்கப்பட்டது. மேலும், சரியான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாதவர்களுக்கு ஆகஸ்ட் 7 வரை மீண்டும் ஒரு அவகாசம் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, தரவரிசை பட்டியல் எப்போது வெளியாகும் என மாணவர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்.

இந்நிலையில், எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்பில் சேர்க்கை பெற விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் நாளை வெளியாகும் என சுகாதாரம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அருண்ராஜ் அறிவித்துள்ளார்.

சரிபார்க்கும் முறைகள்:

நாளை மதியம் 3 மணியளவில் அமைச்சர் தரவரிசை வெளியிட்ட பின்னர், மாணவர்கள் தங்களது தரவரிசையை tnmedicalselection.net மற்றும் tnhealth.tn.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களில் விண்ணப்ப எண் மற்றும் விவரங்களை உள்ளிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கலந்தாய்வு நடைபெறும் நாட்கள்

தேசிய மருத்துவ மாணவர் சேர்க்கை குழு (எம்.சி.சி) வெளியிட்டுள்ள கால அட்டவணைப்படி, வரும் 13ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை முதல் சுற்றுக் கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது. அதில் ஒதுக்கீடு பெற்றவர்கள் வரும் 28ஆம் தேதிக்குள் கல்லூரியில் சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும். அதனைத் தொடர்ந்து, இரண்டாம் சுற்று கலந்தாய்வு இம்மாதம் 31 முதல் செப்டம்பர் 8 வரையும், மூன்றாம் சுற்றுக் கலந்தாய்வு செப்டம்பர் 16 முதல் 26 வரையும் நடைபெறும்.

வகுப்புகள் தொடக்கம் எப்போது?

தொடர்ந்து, நிரப்பப்படாமல் இருக்கும் இடங்களுக்கு அக்டோபர் 3 முதல் 5 வரை மேலும் ஒரு சுற்று கலந்தாய்வு நடத்தப்பட்டு நிரப்பப்படவுள்ளது. இதனையடுத்து, இந்தாண்டு முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் செப்டம்பர் 8ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கான முதல் சுற்றுக் கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் 4 முதல் தொடங்கி நடைபெற்று வரும் சூழலில், மாநிலங்கள் அளவில் உள்ள 80 சதவீத அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 13-ஆம் தேதி தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com