ரெயில்வே 'தட்கல்' முடக்கம்: பிரீமியம் தட்கல் விறுவிறுப்பு- கோடிகளை அள்ள 'பக்கா' பிளான் என்று பயணிகள் ஆதங்கம்

தட்கல் முறையில் டிக்கெட் எடுக்க கவுண்டர்களில் நள்ளிரவிலேயே காத்து கிடக்கிறார்கள்.நிமிடத்துக்கு நிமிடம் மீட்டர் வட்டி போல் கட்டணம் எகிறி கொண்டிருக்கும்.
ரெயில்வே 'தட்கல்' முடக்கம்: பிரீமியம் தட்கல் விறுவிறுப்பு- கோடிகளை அள்ள 'பக்கா' பிளான் என்று பயணிகள் ஆதங்கம்
Published on

சென்னை:

தொலைதூர இடங்களுக்கு செல்பவர்கள் ரெயில் பயணத்தையே விரும்புகிறார்கள். அதற்கு காரணம் பாதுகாப்பு, கட்டணம் குறைவு, சொகுசான பயணம் என்பதுதான்.

3 மாதங்களுக்கு முன்பே ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படுகிறது. ஆனால் எல்லோராலும் 3 மாதங்களுக்கு முன்பே பயண திட்டம் போட முடியாது.

இதனால் குறுகிய காலத்தில் திட்டமிட்டு செல்பவர்கள், அவசர பயணம் மேற் கொள்பவர்களுக்கு டிக்கெட் கிடைப்பதில்லை.

அவர்கள் கடைசி முயற்சியாக தட்கல் முறையில் முன்பதிவை தேடி செல்கிறார்கள். இந்த தட்கல் முன்பதிவு ஒருநாள் முன்பு நடைபெறுகிறது. அதுவும் காலை 10 மணிக்கு குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிக்கும், 11 மணிக்கு தூங்கும் வசதி கொண்ட பெட்டிக்கும் தொடங்குகிறது. முன்பதிவு தொடங்கிய ஓரிரு நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிடும்.

தட்கல் முறையில் டிக்கெட் எடுக்க கவுண்டர்களில் நள்ளிரவிலேயே காத்து கிடக்கிறார்கள்.

இணைய தளங்களை கையாள்பவர்கள் வீடுகளில் இருந்தே டிக்கெட் எடுக்கிறார்கள். இந்த வசதி இல்லாதவர்கள் இணைய தள சேவை மையங்களை அணுகுகிறார்கள்.

கடந்த சில நாட்களாக தட்கல் முன்பதிவுக்கு இணையதளத்தில் உள்ளே நுழைந்து ரெயிலை தேர்வு செய்து, பயணிகள் விவரங்களையும் பதிவு செய்துவிட்ட 'கேப்சா' என்ற குறியீட்டு எண்ணை பதிவு செய்ததும் உள்ளே செல்லாமல் முடங்கி விடுகிறது.

அடுத்த சில நிமிடங்களில் பிரீமியம் தட்கலுக்கு முயன்றால் ஒழுங்காக செயல்படுகிறது. பிரீமியம் தட்கல் என்பது இரண்டு மடங்கு அதிகம். மேலும் நிமிடத்துக்கு நிமிடம் மீட்டர் வட்டி போல் கட்டணம் எகிறி கொண்டிருக்கும்.

உதாரணமாக சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு தட்கல் கட்டணம் ரூ.600 மட்டுமே. ஆனால் பிரிமீயம் தட்கல் கட்டணம் ரூ.1000-க்கு மேல். ஒரு டிக்கெட்டுக்கு குறைந்தபட்சம் ரூ.500 முதல் 1000 வரை ரெயில்வேக்கு கூடுதல் வருவாய் கிடைக்கிறது.

இதற்காகவே தட்கல் முன்பதிவில் தில்லாலங்கடி வேலைகளை ரெயில்வே நிர்வாகம் செய்வதாக பயணிகளிடையே சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ஆனால் ரெயிலவே அதிகாரிகளிடம் கேட்டால் ஒரே நேரத்தில் ஏராளமானோர் இந்த தளத்தை உபயோகப்படுத்துவதால் முடங்குகிறது. என்று சொல்லி எளிதில் தப்பி விடுகிறார்கள். அப்படியானால் பிரீமியம் தட்கலுக்கு மட்டும் எப்படி முடங்காமல் செயல்படுகிறது என்றால் பதில் சொல்ல யோசிக்கிறார்கள். தட்கல் முன்பதிவு தொடங்கும் போது தடங்கல் இல்லாமல் சேவையை வழங்குவதுதான் ரெயில்வேயின் கடமை.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com