

தமிழ்நாடு காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களுக்கான பயிற்சி முகாம் மாமல்லபுரத்தில் உள்ள தமிழ்நாடு சுற்றுலாத்துறைக்கு சொந்தமான கடற்கரை விடுதியில் கடந்த 23-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பயிற்சி முகாமின் நிறைவு நாளான இன்று நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்றார். சென்னை விமான நிலையத்தில் ராகுல் காந்திக்கு காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த நிறைவு விழாவில் பங்கேற்று பேசிய ராகுல்காந்தி, தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு கோஷ்டிகளாகப் பிரிந்து தனித்தனியாகச் செயல்பட்டு வருவது கட்சியின் வளர்ச்சிக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளதாகக் சுட்டிக்காட்டியுள்ளார்.
பயிற்சி கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் பேசிய ராகுல் காந்தி, தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி வலுவடையாததற்குப் பிரதானக் காரணம் உட்கட்சிப் பூசல்களும், பல்வேறு அணிகளாகக் நிர்வாகிகள் தனித்து இயங்குவதுமே ஆகும் என வேதனை தெரிவித்தார். "கட்சியின் உட்கட்சிப் பிரச்சனைகளே காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய முட்டுக்கட்டையாக உள்ளன" என்று அவர் தனது உரையில் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
மாநில அளவில் தலைவர்களிடையேயும் தொண்டர்களிடையேயும் ஒருங்கிணைப்பு இல்லாத சூழல் நிலவுவது, களத்தில் கட்சியின் செயல்பாடுகளைப் பாதிப்பதாக மேலிடத்திற்குப் பல்வேறு புகார்கள் சென்ற வண்ணமாக இருந்தன. இந்தச் சூழலில், ராகுல் காந்தியின் இந்த நேரடி விமர்சனம் மற்றும் எச்சரிக்கை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் காரசாரமான விவாதத்தையும் கிளப்பியுள்ளது.
அரசியல் களத்தில் வலுவான முன்னெடுப்புகளை எடுக்க வேண்டுமானால், தலைவர்கள் தங்கள் சொந்த நலன்களைத் தாண்டி கட்சியின் ஒற்றுமையை முன்னிறுத்த வேண்டும் எனவும், அனைத்து கோஷ்டிப் பூசல்களையும் மறந்து அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தவே புதிய மாவட்ட செயலாளர்கயை நியமித்துள்ளோம் என ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளார்.