தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது மாணவர் பிரணவ் இளங்கோ, அமெரிக்காவின் மிக உயரிய மற்றும் புகழ்பெற்ற ‘ஐவி லீக்’ கல்வி நிறுவனங்களில் ஒன்றான ப்ரவுன் பல்கலைக்கழகத்தில் ரூ. 3.55 கோடி முழு கல்வி உதவித்தொகையுடன் படிக்கத் தேர்வாகி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவன்.
அடுத்த நான்கு ஆண்டுகளுக்கான அவரது முழு படிப்புச் செலவு மற்றும் அமெரிக்காவில் தங்கிப் படிப்பதற்கான அனைத்துச் செலவுகளையும் இந்த ஸ்காலர்ஷிப் முழுமையாக ஏற்கும் என்பது.
பிரணவ், ப்ரவுன் பல்கலைக்கழகத்தில் 'பொது சுகாதாரம் மற்றும் பயன்பாட்டு கணிதம்' ஆகிய துறைகளைத் தேர்வு செய்து படிக்கவுள்ளார்.
கணிதம், தொழில்நுட்பம் மற்றும் தரவு அறிவியல் ஆகியவற்றை ஒன்றிணைத்து, உலகின் மிக முக்கியமான பொதுச் சுகாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதே இவரது முக்கிய நோக்கமாகும்.
பிரணவின் கல்வித் திறமையைப் பாராட்டி அமெரிக்காவின் ப்ரவுன் பல்கலைக்கழகம் மட்டுமின்றி, ஆசியாவின் மிகச் சிறந்த கல்வி நிறுவனமான ஹாங்காங் பல்கலைக்கழகமும் அவருக்கு 100% முழு கல்வி உதவித்தொகையுடன் படிக்க அனுமதி வழங்கியது. இதன் மூலம் உலக அளவில் பிரணவின் திறமைக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.
ஈரோட்டில் உள்ள சிஎஸ் அகாடமியில் பள்ளிப் படிப்பை முடித்த பிரணவ், சிறு வயது முதலே சர்வதேசக் கல்விக்கான தயாரிப்புகளில் ஈடுபட்டு வந்தார்.
தனது 13 வயதிலேயே 'டெக்ஸ்டெரிட்டி குளோபல்' அமைப்பின் தேசிய மாணவர் மேம்பாட்டுத் திட்டத்தில் இணைந்து முறையான வழிகாட்டுதலை பெற்றார்.
கேம்பிரிட்ஜ் சர்வதேசப் பள்ளித் தேர்வுகளில் கணிதப் பாடத்தில் 'உலக அளவில் முதலிடம்' பிடித்து சாதனை படைத்தார்.
கணிதத்தை வெறும் மதிப்பெண்களுக்கான பாடமாகப் பார்க்காமல், சமூக மாற்றத்திற்கான ஒரு கருவியாக பிரணவ் கருதுகிறார்.
செயற்கை நுண்ணறிவு, புரோகிராமிங் மற்றும் தரவு அறிவியல் மூலம், குறிப்பாக மருத்துவ வசதிகள் மற்றும் துல்லியமான தகவல்கள் கிடைக்காத கிராமப்புற மற்றும் பின்தங்கிய மக்களின் பொதுச் சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்துவதே தனது நீண்டகால லட்சியம் என்று பிரணவ் தெரிவித்துள்ளார்.
இந்த அசாத்திய வெற்றி குறித்துப் பேசிய பிரணவ், முறையான வழிகாட்டுதலும் கடின உழைப்பும் இருந்தால், எந்தவொரு சிறிய நகரத்தில் இருந்து வரும் மாணவனும் உலக அளவில் பெரிய சாதனைகளைப் படைக்க முடியும் என்பதற்குத் தனது இந்தப் பயணமே சாட்சி என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.