கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் கைதி அடித்துக்கொலை

மனநல காப்பகத்தில் தங்கி இருந்த அரவிந்தசாமி என்ற கொலை வழக்கு கைதிக்கும் ஜாகிருக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டு உள்ளது.
கீழ்ப்பாக்கம் மனநல காப்பகம்
Published on

கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் அரவிந்தசாமி என்ற கொலை வழக்கு கைதிக்கும் ஜாகிருக்கும் இடையே திடீரென ஏற்பட்ட மோதலில் பலத்த காயமடைந்த ஜாகிர் உயிரிழந்தார்.

கீழ்ப்பாக்கம் மனநல காப்பகம்

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநல காப்பகத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பலர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த மனநல காப்பகத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களும் தனி அறையில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்களின் நடவடிக்கைகளை மனநல காப்பகத்தில் உள்ள காப்பாளர்கள் கவனித்து அவர்களை பாதுகாத்து வருகின்றனர்.

மாற்றுத்திறனாளி

கோவை மாவட்டம் ஆழியார் பகுதியைச் சேர்ந்த ஜாகிர் என்பவரும் மனநல காப்பகத்தில் தங்கியிருந்தார்.

ஆழியார் பூங்காவில் கடந்த 2024-ம் ஆண்டு படுத்து தூங்குவதில் ஏற்பட்ட தகராறில் முதியவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாகிர் பொள்ளாச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதால் ஜாகிரை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநல காப்பகத்தில் அனுமதித்து இருந்தனர்.

ஜாகிர் உயிரிழப்பு

இந்த நிலையில் இந்த மனநல காப்பகத்தில் தங்கி இருந்த நெல்லையை சேர்ந்த அரவிந்தசாமி என்ற கொலை வழக்கு கைதிக்கும் ஜாகிருக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டு உள்ளது.

கழிவறையை பயன்படுத்துவது தொடர்பாக இருவரும் மோதிக்கொண்டு உள்ளனர் அப்போது அரவிந்தசாமி ஜாகிரை சரமாரியாக தாக்கி கீழே தள்ளி மிதித்துள்ளார்.

இதில் தலை மற்றும் முகத்தில் பலத்த காயமடைந்த ஜாகிர் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் ஜாகீர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

போலீசார் விசாரணை

இந்த சம்பவம் தொடர்பாக தலைமைச் செயலக காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அரவிந்தசாமியை இந்த வழக்கில் கைது செய்து அது தொடர்பான தகவலை கோர்ட்டில் தெரிவித்து உள்ளனர்.

அரவிந்த்சாமி மனநல காப்பகத்திலேயே தொடர்ந்து இருப்பார் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இவர் தனது தாயை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு மன நல காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com