உஷார்! ஊக்கத்தொகை என்ற பெயரில் புதுவகை மோசடி: ஊறுகாய் வியாபாரியின் பணத்தை அபேஸ் செய்த மர்ம நபர்கள்

புகாரின்பேரில் புளியந்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஊறுகாய் வியாபாரியின் வங்கி கணக்கில் இருந்து, நூதன முறையில் பணத்தை திருடிய மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
உஷார்! ஊக்கத்தொகை என்ற பெயரில் புதுவகை மோசடி: ஊறுகாய் வியாபாரியின் பணத்தை அபேஸ் செய்த மர்ம நபர்கள்
Published on

மகன் படிப்புக்கு ஊக்கத்தொகை வந்துள்ளதாக கூறி ஊறுகாய் வியாபாரியின் வங்கி கணக்கில் இருந்து நூதன முறையில் பணம் 'அபேஸ்' செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

படிப்புக்கு ஊக்கத்தொகை

சென்னை கொடுங்கையூர் எம்.ஜி.ஆர். நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் முத்து காமாட்சி (வயது 50). இவர், மளிகை கடைகளுக்கு ஊறுகாய் வினியோகம் செய்து வருகிறார். இவரது மகன் மகாலிங்கம். இவர், கோட்டூர்புரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம்ஆண்டு படித்து வருகிறார்.

இந்தநிலையில், முத்து காமாட்சியின் செல்போனுக்கு மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு, உங்கள் மகனின் படிப்புக்காக ரூ.48 ஆயிரத்து 500 ஊக்கத்தொகை வந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், அந்த பணத்தை பெற்றுக்கொள்ள குறிப்பிட்ட செல்போன் எண்ணில் இருந்து அனுப்பிய கியூ.ஆர்.கோடை ஸ்கேன் செய்யுமாறு கூறினார்.

பணம் 'அபேஸ்'

இதை உண்மை என நம்பிய முத்து காமாட்சி, அந்த கியூ.ஆர்.கோடை ஸ்கேன் செய்தபோது, அவரது வங்கி கணக்கில் இருந்த ரூ.1 லட்சத்து 21 ஆயிரத்து 250 மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அதன்பிறகுதான் மர்மநபர் தன்னிடம் நூதன முறையில் பேசி வங்கி கணக்கில் உள்ள பணத்தை 'அபேஸ்' செய்தது தெரியவந்தது. இதுபற்றி அவர் கொடுத்த புகாரின்பேரில் புளியந்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஊறுகாய் வியாபாரியின் வங்கி கணக்கில் இருந்து, நூதன முறையில் பணத்தை திருடிய மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com