

முதலமைச்சர் விஜய்யுடன் ஆலோசனை நடத்தி அவரது உத்தரவுப்படி நாராயணபுரம் ஏரியில் சுற்றுலா படகு விட ஏற்பாடு செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.
முதலமைச்சர் விஜய் உத்தரவுப்படி தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் கடந்த 3 நாட்களாக சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஏரிகள் மற்றும் நீர்நிலைகளில் தூர்வாரும் பணிகளை தொடங்கி வைத்து கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியினை தூர்வாரி சீரமைக்கும் பணிகளை அமைச்சர் என்.ஆனந்த் இன்று தொடங்கி வைத்து ராட்சத பொக்லைன் எந்திரத்தில் ஏரிக்குள் சென்று ஆய்வு மேற்கொண்டார். சென்னை மாநகராட்சி எல்லைக்குள் அமைந்துள்ள இந்த ஏரியில் ஆகாயத் தாமரைகள், மிதவை தாவரங்கள் மற்றும் மிதவை பொருட்கள் படர்ந்து நீரோட்டத்தை பாதிக்கும் வகையில் உள்ளது.
இதே நிலை தொடர்ந்தால் பருவமழை தொடங்கும் போது வெள்ள பாதிப்பு ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். ஏற்கனவே கடந்த மழை காலங்களில் நாராயண புரம் ஏரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுற்றி உள்ள பகுதிகள் பெரும் பாதிப்புக்குள்ளானது.
எனவே கடந்த காலங்களில் நடந்தது போல் நடக்காத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரியை மழைக் காலத்திற்கு முன்பு தூர்வாரி சீரமைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் என்.ஆனந்த் உத்தரவிட்டார். இதுமட்டுமின்றி நாராயணபுரம் ஏரியை முற்றிலும் சீரமைத்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சுற்றுலா படகு விடுவதற்கு அதிகாரிகளுடன் அமைச்சர் என்.ஆனந்த் ஆலோசனை நடத்தினார். இது குறித்து முதலமைச்சர் விஜய்யுடன் ஆலோசனை நடத்தி அவரது உத்தரவுப்படி நாராயணபுரம் ஏரியில் சுற்றுலா படகு விட ஏற்பாடு செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.
அடுத்ததாக வேளச்சேரி ஏரியினை தூர்வாரும் பணியினை அமைச்சர் என்.ஆனந்த் தொடங்கி வைத்து ஆய்வு நடத்தினார். வேளச்சேரி பகுதியில் அமைந்துள்ள, வேளச்சேரி ஏரியில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை, மிதக்கும் பொருட்கள் மற்றும் கழிவுகள் ஆகியவற்றை அகற்றி மழைக்காலங்களில் மழை நீர் தங்கு தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படவுள்ளது. பருவமழை காலத்திற்கு முன்னர் வெள்ள முன்னெச்சரிக்கை பணியாக, திட்டமிடப்பட்டு முடிக்க என்.ஆனந்த் தூர்வாரும் பணியை கொடியசைத்து தொடங்கி வைத்து, கள ஆய்வு மேற்கொண்டு விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதில் அமைச்சரும் வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினருமான குமார், சோழிங்கநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சரவணன், நீர்வளத்துறை அரசு முதன்மைச் செயலாளர் முனைவர் சத்யபிரத சாகு, தெற்கு வட்டார துணை ஆணையாளர் ஆப்தாப் ரசூல், நீர்வளத்துறை முதன்மை தலைமைப் பொறியளார் மற்றும் தலைமைப் பொறி யாளர் (பொது), கோபால கிருஷ்ணன், சென்னை மண்டல தலைமை பொறி யளார் ஜானகி, பாலாறு வடிநில வட்டம் கண் காணிப்பு பொறியாளர் மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.