சொரிமுத்து அய்யனார் கோவில் முன்பு ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி

கார்த்திக், ஹரிஷ் குமார் இருவரும் கோவிலின் முன்பு செல்லும் தாமிரபரணி ஆற்றின் அருகே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.வனத்துறையினர் 2 சிறுவர்களின் உடலையும் மீட்டு அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
சொரிமுத்து அய்யனார் கோவில் முன்பு ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி
Published on

சிங்கை:

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள நிலையூரை சேர்ந்தவர் சரவணன். அதே பகுதியைச் சேர்ந்தவர் விஷ்ணுகுமார். உறவினர்களான இவர்கள் 2 பேரும் தங்களது குடும்பத்தினருடன் இன்று காலை நெல்லை மாவட்டம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழாவில் பங்கேற்பதற்காக ரெயிலில் நெல்லை வந்து சேர்ந்தனர்.

அங்கிருந்து பஸ்சில் சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு சென்றனர். அங்கு சரவணன் மகன் கார்த்திக் (வயது 8) மற்றும் விஷ்ணு குமாரின் மகன் ஹரிஷ் குமார் (10) ஆகிய 2 பேரும் கோவிலின் முன்பு செல்லும் தாமிரபரணி ஆற்றின் அருகே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

சிறிது நேரத்தில் அவர்கள் 2 பேரையும் காணவில்லை. இதனால் சிறுவர்களின் உறவினர்கள் அந்த பகுதியில் தேடிப் பார்த்தனர். அப்போது கார்த்திக்கும், ஹரிஷ் குமாரும் தண்ணீரில் பிணமாக மிதந்து கொண்டிருந்தனர்.

இதனைப் பார்த்து அவரது உறவினர்கள் கதறி அழுதனர். தகவல் அறிந்த வனத்துறையினர் 2 சிறுவர்களின் உடலையும் மீட்டு அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக கல்லிடைக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com