

234 தொகுதிகளை கொண்ட தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு கடந்த ஏப்ரல்.23ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. அப்போது, வெளிநாடுகளில் குடியுரிமைப் பெற்ற பலர் சட்டவிரோதமாக வாக்கு அளித்ததாக கைது செய்யப்பட்டனர்.
அந்த வகையில், கனடா நாட்டில் குடியுரிமை பெற்று தேர்தலில் சட்டவிரோதமாக வாக்களித்த ஜிதேந்திரநாத் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து தன்னை கனடா செல்ல அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜிதேந்திரநாத் மனுத்தாக்கல் செய்தார். அதில்,
“சென்னையில் 2012-ம் ஆண்டு பட்டப்படிப்பை முடித்து கனடாவில் குடும்பத்துடன் குடியேறினேன். கடந்த பிப்ரவரி மாதம் இந்திய பாஸ்போர்ட்டை ஒப்படைத்து விட்டு, கனடா நாட்டின் குடியுரிமையை பெற்றேன்.
என்னுடைய தம்பி திருமணம் கடந்த ஏப்ரல் 30-ந்தேதி சென்னையில் நடந்தது. இதற்காக என் மகனுடன் ஏப்ரல் 18ந்தேதி இந்தியா வந்தேன். என் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்ததால், ஏப்ரல் 23-ந்தேதி நடந்த தேர்தலில் ஒரு சுயேட்சை வேட்பாளருக்கு வாக்களித்தேன்.
பின்னர் மே 8-ந்தேதி நாடு திரும்புவதற்காக சென்னை விமான நிலையத்துக்கு சென்றபோது, குடியுரிமை அதிகாரி தேர்தலில் வாக்களித்தீர்களா? என்று கேட்டார்.
நான் ஆமாம் என்றதும். என்னை போலீசில் ஒப்படைத்து விட்டனர். போலீசார் என் மீது, வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் ஜாமினில் வெளியேவிட்டனர். இந்த வழக்கு இருப்பதால், என்னை கனடா செல்ல குடியுரிமை அதிகாரிகள் அனுமதி வழங்க மறுக்கின்றனர்.
வருகிற 8-ந்தேதிக்குள் வேலைக்கு செல்லவில்லை என்றால், கனடா நிறுவனம் என்னை பணி நீக்கம் செய்து விடும். எனவே, தேர்தலில் சட்டவிரோதமாக வாக்களித்ததாக என் மீதான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது ஆஜராக தயாராக உள்ளேன். என்னை கனடா செல்ல அனுமதிக்கவேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வக்கீல்கள் எஸ்.துரைசாமி, வி.இளங்கோவன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மனுதாரரை நிபந்தனையுடன் கனடா செல்ல அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.