பெரியபாளையம் அருகே வீடு புகுந்து துணிகரம்... வயதான தம்பதியை மிரட்டி 60 பவுன் நகை-பணம் கொள்ளை

மோப்ப நாய் கொள்ளை நடந்த வீட்டில் இருந்து ஏரிக்கரை வரை ஓடி நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
கொள்ளை நடந்த வீட்டை படத்தில் காணலாம்.
கொள்ளை நடந்த வீட்டை படத்தில் காணலாம்.
Published on

பெரியபாளையம் அருகே உள்ள அத்தங்கி காவனூர் ஊராட்சி, மாந்தோப்பு பகுதியில் வசித்து வருபவர் ராஜகோபால் (வயது 75). விவசாயி. இவரது மனைவி கவுசல்யா (70).

நகை-பணம் கொள்ளை

இவர்களது 2 மகன்கள், மகள் திருமணமாகி சென்னையில் தனித்தனியாக குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். ராஜகோபாலும், கவுசல்யாவும் தனியாக வீட்டில் வசித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் அவர்கள் வீட்டை பூட்டி விட்டு தூங்கினர். அதிகாலை சுமார் 1.30 மணியளவில் மர்ம நபர்கள் ராஜகோபாலின் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த ரொக்க பணம் ரூ.5 லட்சம் மற்றும் 60 பவுன் தங்க நகைகளை கொள்ளை அடித்தனர்.

மேலும் வீட்டில் உள்ள அறையில் தூங்கிக்கொண்டிருந்த ராஜகோபாலின் மனைவி கவுசல்யாவின் கழுத்தில் இருந்த தங்க செயினையும் பறித்தனர். இதில் திடுக்கிட்டு எழுந்த கவுசல்யா அருகில் கொள்ளையர்கள் நிற்பதை கண்டு கூச்சலிட்டார். இதையடுத்து எழுந்த ராஜகோபாலும் எழுந்து கத்தினார்.

தப்பி ஓட்டம்

உடனே கொள்ளையர் வயதான தம்பதி ராஜகோபால் மற்றும் அவரது மனைவி கவுசல்யாவை மிரட்டி விட்டு அங்கிருந்து நகை, பணத்துடன் தப்பி சென்று விட்டனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து வெங்கல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் திருவள்ளூரில் இருந்து மோப்ப நாய் நிக்கி வர வழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் அங்கு பதிந்து இருந்த ரேகைகளை பதிவு செய்தனர். மோப்ப நாய் கொள்ளை நடந்த வீட்டில் இருந்து ஏரிக்கரை வரை ஓடி நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

விவசாயி

விவசாயி ராஜகோபால் நேற்று நெல் விற்ற பணத்தை வீட்டில் வைத்து இருந்தார். இதனை அறிந்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். எனவே இதில் ஈடுபட்டது அதே பகுதியை சேர்ந்த நபர்களாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com