

பரபரப்பான, சவாலான கொலை வழக்குகளில் போலீ சார் துப்பு துலக்குவதற்கு கொலையாளிகள் ஏதாவது சின்ன தடயத்தையாவது விட்டு சென்று இருப்பார்கள்.
அந்த வகையில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை துண்டு துண்டாக வெட்டிக்கொன்ற மனைவி மூட்டை கட்டி உடலை வீசிய பை துப்பு துலக்குவதற்கு போலீசாருக்கு பெரிதும் உதவி உள்ளது.
பெரம்பூர் ரெயில் நிலையத்தில் தலை, கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் உடலை மட்டும் வீசி சென்ற கொலை சம்பவத்தில் போலீசார் துப்பு துலக்கி கொலை செய்யப்பட்டவரின் மனைவியையும், அவரது கள்ளக்காதலனையும் கைது செய்து உள்ளனர்.
இந்த கொலையில் போலீசார் துப்பு துலக்கியதைப் பற்றி பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் விவரம் வருமாறு:-
சென்னை பெரம்பூர் ரெயில் நிலையத்தில் 4-வது நடைமேடையில் கடந்த 5-ந்தேதி நீல கலர் சூட்கேஸ் ஒன்று கேட்பாரற்று கிடந்தது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று அதனை திறந்து பார்த்தனர். அப்போது அவர்கள் கண்ட காட்சி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தலை, கை, கால்கள் முழுமையாக துண்டிக்கப்பட்ட நிலையில் கழுத்தில் இருந்து இடுப்பு வரையிலான உடல் பகுதி மட்டும் சூட்கேசில் இருந்தது. அதனை வைத்து போலீசார் துப்பு துலக்க தொடங்கினார்கள்.
கொலை செய்யப்பட்ட வாலிபரின் உடலில் ஒரே ஒரு டிரவுசர் மட்டுமே இருந்தது. அவர் யார் என்பது தெரியாத நிலையில் போலீசார் முதலில் சற்று திணறினார்கள். அதன் பின்னர் உடலில் ஏதாவது தடயங்கள் உள்ளதா? என்பது பற்றி ஆய்வு செய்தபோதுதான் போலீசார் அவர் அணிந்திருந்த டிரவுசரை பார்த்தனர்.
இந்த டிரவுசர் எங்கு வாங்கப்பட்டது என்பதை கண்டுபிடிப்பதற்காக அதில் பொறிக்கப்பட்டிருந்த “பார்கோடு” மூலமாக துப்பு துலக்கினார்கள். இதில் சென்னையில் உள்ள பிரபல துணிக்கடை ஒன்றில் அந்த டிரவுசர் வாங்கப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது. அதை வைத்து துப்பு துலக்கியதில் போலீசாருக்கு செல்போன் எண் கிடைத்தது.
அந்த செல்போன் எண்ணை வைத்து அடுத்தக்கட்ட விசாரணையை தொடங்கினார்கள். அப்போது அந்த செல்போனை பயன்படுத்தும் நபர் தேனாம்பேட்டை மற்றும் தி.நகர் பகுதிகளில் சுற்றி திரிவது தெரிய வந்தது. எந்த பகுதிகளுக்கு அந்த நபர் அதிகமாக செல்கிறார் என்பதை போலீசார் கண்டு பிடித்தனர்.
அப்போது போலீசார் தேடிய நபர் தேனாம்பேட்டையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை பகுதியிலேயே அதிகமாக நடமாடியது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து தனியார் ஆஸ்பத்திரி அருகில் போலீசார் கண்காணித்தனர்.
சம்பந்தப்பட்ட செல்போன் எண்ணை தங்களது செல்போனில் பதிவு செய்தனர். அப்போது அந்த எண்ணின் வாட்ஸ்அப் டிபியில் பெண்ணின் புகைப்படம் ஒன்று இருந்தது.
இதைத் தொடர்ந்து கொலையாளி அந்த பெண்ணாக இருக்க வேண்டும் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று உடல் கட்டப்பட்டிருந்த பையை போலீசார் காட்டினார்கள். அப்போது ஆஸ்பத்திரி ஊழியர்கள் எங்கள் ஆஸ்பத்திரியில் பயன்படுத்துவதுதான் என்று தெரிவித்தனர்.
போலீசார் விசாரணை நடத்திய தனியார் ஆஸ்பத்திரியில் வெளிநாடுகளில் இருந்து புற்றுநோய்க்காக பலரும் சிகிச்சை பெற வருவது வழக்கம். அது போன்று வருப வர்களை தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கும் சிறிய ஏஜென்சிகள் போல பலரும் செயல்பட்டு வருவது தெரிய வந்தது.
அதுபோன்று யார்-யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பது பற்றிய விசாரணையை முடுக்கி விட்ட போலீசார் தங்களிடம் உள்ள செல்போன் எண்ணை வைத்து அதன் வாட்ஸ்அப் டிபியில் இடம் பெற்றுள்ள பெண்ணின் புகைப்படத்தை ஆஸ்பத்திரி ஊழியர்களிடம் காட்டினார்கள்.
அப்போது ஆஸ்பத்திரி ஊழியர்கள் அந்த பெண் அடிக்கடி தங்களது ஆஸ்பத்திரிக்கு நோயாளிகளை அழைத்து வருவதாக கூறினார்கள். இதையடுத்து போலீசார் நோயாளி போல் நடித்து அந்த பெண்ணின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசினார்கள்.
எதிர்முனையில் இன்னொரு பெண்ணை பேச வைத்து புற்றுநோய் சிகிச்சைக்காக தங்களுக்கு தேவையான உதவிகளை செய்து தாருங்கள் என்று கேட்டதும் போலீசார் தேடிய பெண் “நாம் நேரில் சந்திக்கலாம்” என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து ஆஸ்பத்திரி அருகில் வருவதாகவும் அங்கு வைத்து நாம் சந்திக்கலாம் என்றும் அவர் கூறினார். இதைத் தொடர்ந்து ஆஸ்பத்திரி அருகில் ரகசிய கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது போலீசார் தேடி வந்த அந்த பெண் அங்கு வந்தார்.
அவரை உடனடியாக மடக்கி பிடித்த போலீசார் ரகசிய இடத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போதுதான் பெரம்பூர் ரெயில் நிலையத்தில் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட வாலிபர் யார் என்பது தெரிந்தது. அவரது பெயர் அமீர்அலி என்பது தெரிய வந்தது.
கள்ளக்காதல் விவகாரத்தில் அமீர்அலியின் மனைவி ரோகிமா தனது காதலன் அசரப் என்பவரோடு சேர்ந்து கணவரை துண்டு துண்டாக வெட்டி கொன்ற திடுக்கிடும் தகவல்கள் போலீசுக்கு தெரிய வந்தது.
ரோகிமாவுக்கு அசாம் மாநிலத்தில் வேறு ஒருவருடன் திருமணமாகி குழந்தையும் பிறந்துள்ளது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்துள்ளார். அதன் பிறகுதான் அமீர்அலியை 2-வதாக திருமணம் செய்து கொண்டு கடந்த 3 ஆண்டுகளாக சென்னையில் வசித்து வருவது தெரிய வந்தது.
தேனாம்பேட்டை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ரோகிமாவின் முதல் கணவரை குறிப்பிட்டு அவரை விட்டுவிட்டு வந்தவள்தானே நீ என்று அமீர்அலி அடிக்கடி துன்புறுத்தியும் வந்துள்ளார்.
அதே நேரத்தில் அமீர்அலிக்கு வேறு பெண்களுடனும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி கேட்டபோது அதையெல்லாம் நீ கேட்கக் கூடாது என அமீர்அலி கோபத்தில் பலமுறை ரோகிமாவை சரமாரியாக அடித்து உதைத்ததும் தெரிய வந்தது.
இதனாலேயே ரோகிமாவுக்கு காதலன் அசரப் மீது அதிக ஈர்ப்பு ஏற்பட்டு அவருடன் நெருக்கத்தை அதிகரித்தது விசாரணையில் தெரிய வந்தது.
இதனையடுத்து அசரப் “நீ அமீர்அலியை விட்டுவிட்டு என்னோடு வந்து விடு” என்று கூறியுள்ளார். அதற்கு பதிலளித்த ரோகிமா “அப்படி நாம் இருவரும் சேர்ந்து வாழ்ந்தால் அமீர்அலி நம்மை வாழ விடமாட்டான். நாம் அவனை கொன்று விடுவோம்” என்று கூறியுள்ளார்.
அதன்படி இருவரும் திட்டம் போட்டு அமீர்அலியை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்துள்ளனர். பின்னர் உடலை மட்டும் தனியாக துண்டித்து பெரம்பூர் ரெயில் நிலையத்தில் வைத்துள்ளனர். கை, கால்கள் பாகங்களை தனியாக துண்டித்து ஓடும் ரெயிலில் வைத்துள்ளனர்.
தலையை மட்டும் தனியாக துண்டித்து ரெயிலில் எடுத்துச் சென்று செங்கல்பட்டு ரெயில் நிலையம் அருகே ஏரிக்கரை ஒன்றில் புதைத்து விட்டு சென்னை திரும்பி உள்ளனர்.
உடல் பாகங்கள் தனித்தனியாக துண்டித்து எடுத்து விட்டதால் போலீசாரால் நிச்சயம் கண்டுபிடிக்க முடியாது என்று ரோகிமாவும், அசரப்பும் நினைத்து இருந்தனர். ஆனால் அமீர்அலி உடலை ஆஸ்பத்திரி பையால் மூட்டை கட்டுகிறோமே நாம் மாட்டிக் கொள்ள மாட்டோமா? என்கிற சிந்தனை இல்லாமல் ஆதாரத்தையும் சேர்த்து அமீர்அலி உடலோடு கட்டிய ரோகிமா அதன் மூலமாகவோ போலீசாரின் வலையில் தானாகவே சிக்கி உள்ளார்.
இதன் மூலம் இந்த வழக்கில் போலீசார் துப்பு துலக்குவதற்கும் அது எளிதாக அமைந்துள்ளது.