பரமக்குடி-ராமநாதபுரம் இடையே 4 வழிச்சாலை - பிரதமர் மோடி தமிழில் பதிவு

பரமக்குடி–ராமநாதபுரம் 4 வழிச்சாலைக்கு ரூ.1,853 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது பரமக்குடி-ராமநாதபுரம் இடையே உள்ள 46 கி.மீ. தூரம் 4 வழிச்சாலையாக விரிவாக்கப்பட உள்ளது.
பரமக்குடி-ராமநாதபுரம் இடையே 4 வழிச்சாலை - பிரதமர் மோடி தமிழில் பதிவு
Published on

தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ள திட்டங்கள் குறித்து ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மதுரை –ராமேஸ்வரம்–தனுஷ்கோடி முனையம் ஆகிய புனிதத் தலங்களை இணைக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலை கட்டப்பட்டுள்ளது. மதுரை–பரமக்குடி வரையில் ஏற்கனவே 4 வழி தேசிய நெடுஞ்சாலை கட்டப்பட்டுள்ளது.

பரமக்குடி–ராமநாதபுரம் 4 வழிச்சாலைக்கு ரூ.1,853 கோடி ஒதுக்க அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 46.7 கி.மீ. தூரத்துக்கு பரமக்குடி – ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலை திட்டப் பணிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம்– தனுஷ்கோடி வரை தேசிய நெடுஞ்சாலையை நீட்டிக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

இந்நிலையில், பரமக்குடி - ராமநாதபுரம் பிரிவில் 4 வழிச்சாலை திட்டம் குறித்து பிரதமர் மோடியின் தனது எக்ஸ் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், "தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மகத்தான செய்தி. பரமக்குடி - ராமநாதபுரம் பிரிவில் 4 வழிச்சாலை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பொருளாதார வளர்ச்சி மற்றும் சுற்றுலாவை அதிகரிக்கவும் செய்யும்" என்று தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com