கொடைக்கானல் அருகே விவசாயிக்கு ரூ.1 லட்சம் மின் கட்டணம் செலுத்த நோட்டீஸ்

மின் கட்டணத்தை செலுத்தாவிட்டால் இணைப்பு துண்டிக்கப்படும் என்று எச்சரித்ததால் கவலையடைந்துள்ளார்.கடந்த சில மாதங்களாகவே எங்கள் பகுதி மக்களுக்கு கூடுதல் மின் கட்டணம் வருகிறது.
கொடைக்கானல் அருகே விவசாயிக்கு ரூ.1 லட்சம் மின் கட்டணம் செலுத்த நோட்டீஸ்
Published on

பெரும்பாறை:

கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களில் விவசாயமே முதன்மையான தொழிலாக இருந்து வருகிறது. இங்குள்ள வீடுகளுக்கு சிங்கிள் பேஸ் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து வீடுகளுக்கும் டிஜிட்டல் மின் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே இப்பகுதியில் உள்ள வீடுகளில் குறைந்த அளவு மின்சாரமே பயன்படுத்தி வந்தாலும் ஆயிரக்கணக்கில் மின் கட்டணம் வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் கே.சி.பட்டியைச் சேர்ந்த இளையராஜா என்ற விவசாயி 8976 யூனிட் மின்சாரம் பயன்படுத்தியதற்காக ரூ.1 லட்சத்து 1333 மின் கட்டணம் செலுத்த வேண்டும் என மின் வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்த இளையராஜா தான் அந்த அளவுக்கு மின்சாரத்தை பயன்படுத்தவில்லை என்றும் கூடுதல் மின் கட்டணம் எவ்வாறு வந்தது என மின் வாரிய அலுவலகத்தில் புகார் அளித்தார்.

ஆனால் அங்கிருந்த ஊழியர்கள் அது பற்றி தங்களுக்கு தெரியாது. மின் கட்டணத்தை செலுத்தாவிட்டால் இணைப்பு துண்டிக்கப்படும் என்று எச்சரித்ததால் கவலையடைந்துள்ளார்.

இது குறித்து கே.சி.பட்டி கிராம மக்கள் தெரிவிக்கையில், கடந்த சில மாதங்களாகவே எங்கள் பகுதி மக்களுக்கு கூடுதல் மின் கட்டணம் வருகிறது. நகர்புறங்களில் உள்ளதைப் போல வாசிங் மெஷின், கிரைண்டர் போன்றவை கூட பெரும்பாலான வீடுகளில் இல்லை. மின் விசிறி, டி.வி. போன்றவை மட்டுமே உள்ளது.

அது போன்ற வீடுகளுக்கும் ஆயிரக்கணக்கில் மின் கட்டணம் வருகிறது. இது குறித்து மின் வாரிய அலுவலகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது இளையராஜா என்பவருக்கு ரூ.1 லட்சம் வந்துள்ளதைப் போல பலருக்கும் ரூ.7 ஆயிரம், ரூ.8 ஆயிரம் என மின் கட்டணம் செலுத்துமாறு நோட்டீஸ் வந்துள்ளது.

இதனை கட்டாவிட்டால் இணைப்பு துண்டிக்கப்படும் என அலுவலர்கள் தெரிவிப்பதால் மாவட்ட நிர்வாகம் இப்பிரச்சனையில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com