ராசிபுரம் வி நகர் பகுதியில் கோவில் உண்டியலில் திருட்டு

ராசிபுரம் வி நகர் பகுதியில் கோவில் உண்டியலில் பணம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
.
.
Published on

ராசிபுரம்:

ராசிபுரம் டவுன் வி நகர் எண்.2 பகுதியில் பிரசித்தி பெற்ற சித்தி விநாயகர் கோவில் உள்ளது. நேற்று இரவு கோவில் பூசாரி வழக்கம்போல் பூட்டி விட்டு சென்றுவிட்டார். இன்று காலையில் கோவில் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இன்று அதிகாலை 2 மர்ம நபர்கள் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே சென்று உள்ளனர். 

கோவிலுக்கு உள்ளே சென்றவர்கள் உண்டியலை உடைக்கும்போது திடீரென்று அலாரம் சத்தம் கேட்டுள்ளது. இதில் பயந்துபோன 2 மர்ம நபர்களும் அங்கிருந்து தப்பித்து விட்டனர். 10 நிமிடம் கழித்து மீண்டும் அந்த 2 மர்ம நபர்கள் கோவிலுக்கு வந்துள்ளனர். 

கோவிலின் அருகில் பொதுமக்கள் யாரும் இல்லாததால் மர்ம நபர்கள் இரண்டு பேரும் கோவிலுக்கு உள்ளே சென்று உண்டியலில் போடப்பட்டிருந்த பணத்தை அவர்கள் கொண்டுவந்திருந்த துண்டில் போட்டு எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர். இந்த காட்சிகள் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது. 

சம்பவ இடத்திற்கு ராசிபுரம் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள அந்த 2 மர்ம நபர்கள் யார் என்பதை கண்டறிவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கோவில் உண்டியல் 40 நாட்களுக்கு முன்பு திறக்கப் பட்டதாகவும் தற்போது உண்டியலில் ரூ 1000 முதல் 1500 வரை இருந்திருக்கலாம் என்றும் அந்த பணத்தை திருட வந்த 2 மர்ம நபர்களும் கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என்று அங்கிருந்த பொதுமக்கள் தெரிவித்தனர். 

நேற்று ராசிபுரம் அருகே 4 கடைகளில் திருடர்கள் கொள்ளையடித்த சம்பவம் நடந்தது. இந்த நிலையில் கோவில் உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற திருட்டு சம்பவம் ராசிபுரம் பகுதியில் அடிக்கடி நடந்து வருவதால் போலீசார் திருட்டுக்களை தடுப்பதில் இரவு தீவிர கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com