

நாமக்கல்:
நகர்ப்பற உள்ளாட்சித் தேர்தலில், நாமக்கல் நகராட்சியில் தி.மு.க. 36 இடங்களிலும், அ.தி.மு.க. ஒரு இடத்திலும், சுயேச்சைகள் 2 பேர் போட்டியின்றியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தி.மு.க. ஆதரவு சுயேச்சைகள் இருவரும் தற்போது தி.மு.க. வார்டு உறுப்பினர்கள் என்ற அடிப்படையிலேயே உள்ளனர். இதனால் 38 வார்டு உறுப்பினர்களுடன் தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் உள்ளது.
தி.மு.க. புதிய உறுப்பினர்கள் அனைவரும் முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். மார்ச் 2-ந்தேதி பதவியேற்பு விழா நாமக்கல் நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
இதனையொட்டி ஒவ்வொரு இருக்கையிலும் வார்டுகளின் எண் எழுதப்பட்டது. கூட்ட அரங்கம் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு, தலைவர், துணைத் தலைவர், ஆணையருக்கான இருக்கைகள் மேடையில் பொருத்தப்பட்டன.
நாமக்கல்-பரமத்தி சாலையில் இருந்த நகராட்சி அலுவலகம், திருச்செங்கோடு சாலையில் கடந்த 2018-ல் புதிதாக கட்டப்பட்ட அலுவலகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. தற்போது புதிய கட்டத்தில் முதல் நகர்மன்றக் கூட்டம் நடைபெற உள்ளது.
இதற்கு முன் பழைய நகராட்சிக் கட்டடத்தில், கடந்த 2016-ம் ஆண்டு கடைசியாக நகர்மன்றக் கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.