

திருச்செங்கோடு:
கொங்கு மண்டலத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச நாளன்று நிலா பிள்ளையாருக்கு வழிபாடு நடத்தி பெண்கள் கும்மி அடிக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
கிராமத்தில், பொதுவான இடத்தில், பெண்கள், சிறுவர், சிறுமியர் கூடி, நிலா வந்ததும் விழா தொடங்கும். பிள்ளையார் பிடித்து வைத்து, வீடுகளில் இருந்து எடுத்துவரும் உணவு பதார்த்தங்களை படைத்து, நிலாவை வழிபடுகின்றனர்.
அதன்பின், கும்மி பாடல்களை பாடி, கும்மியடித்து விளையாடுகின்றனர். நிறைவாக, அனைவரும் உணவை சாப்பிடுவர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தொண்டிகரடு பகுதியில் தைப்பூசத்தை முன்னிட்டு நிலா பிள்ளையாரை வணங்கி கும்மியடித்து ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் தைப்பூசத்தை வரவேற்றனர்.
பின்னர் பிள்ளையாரை வணங்கி இரவு முழுவதும் கும்மியடித்து வழிபட்டனர். அதிகாலையில் பிள்ளையாரை நீர்நிலைகளில் கரைத்தனர்.
பொதுவாக மார்கழி மாதம் பனிக் காலம். தை மாதம் வெப்பநிலை மாற்றம் ஏற்படும். இதனை கருத்தில் கொண்டு கைகளை தட்டி கும்மி அடிக்கும் போது கைகளில் உள்ள நரம்புகள் தூண்டப்பட்டு தைமாத வெப்ப சூழ்நிலைக்கு தகுந்தாற் போல் உடல் மாற்றமடையும் என்பது அறிவியல் காரணமாக கூறப்படுகிறது.
பொதுவாக தைப்பொங்கல் சூரியனை வழிபடும் நிகழ்வாகவும் நிலா பிள்ளையார் சந்திரனை வழிபடும் நிகழ்வாகவும் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.