

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் 15 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 14 லட்சத்து 64 ஆயிரத்து 300 தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இதுவரை முதல் தவணை தடுப்பூசி 12 லட்சத்து 26 ஆயிரத்து 236 நபர்களுக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி 8 லட்சத்து 56 ஆயிரத்து 549 நபர்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளது. முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் சதவீதம் 83.74. இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் சதவீதம் 58.05.
கர்ப்பிணி தாய்மார்களுக்கு முதல் தவணை தடுப்பூசி 8 ஆயிரத்து 800 நபர்களுக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி 1728 நபர்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கு முதல் தவணை தடுப்பூசி 10 ஆயிரத்து 353 நபர்களுக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி 1740 நபர்களுக்கும், உடல் ஊனமுற்றோர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி 15 ஆயிரத்து 903 நபர்களுக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி 12ஆயிரத்து 969 நபர்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை நடந்த 20 மாபெரும் தடுப்பூசி முகாம்களில் 7 லட்சத்து 21 ஆயிரத்து 798 பேர் தடுப்பூசி செலுத்தி பயன்பெற்றனர். கொரோனா நோய்த் தொற்றானது முற்றிலும் ஒழியவில்லை. தினசரி கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றார்கள்.
எனவே கல்லூரி மாணவ, மாணவியர்கள் தங்கள் பெற்றோர்களுக்கும், உறவினர்கள், நண்பர்களுக்கும் கொரோனா தடுப்பூசியின் அவசியத்தை எடுத்துரைத்து அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வதை உறுதி செய்யவேண்டும் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.