

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதிகளில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. சமீபகாலமாக உணவு தண்ணீர் தேடி யானைகள் அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகே இருக்கும் கிராமங்களுக்குள் புகுந்து தோட்டங்களுக்குள் நுழைந்து பயிர்களை தொடர்ந்து சேதம் செய்து வருகிறது. இதைபோல் சத்தி -மைசூர் தேசிய நெடுஞ்சாலையோரம் நின்று கொண்டு வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், நேற்று இரவு தாளவாடி அடுத்த பைனாபுரம் கிராமத்தில் அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை ஒன்று புகுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.
வனத்துறை வாகனத்தில் இருந்த சைரன் ஒலியை எழுப்பி யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் யானை மிரண்டு ஓடியது யானை பின்னால் வனத்துறையினர் வாகனத்தில் சென்று தொடர்ந்து சைரன் ஒலி எழுப்பி பின்னால் விரட்டி சென்றனர். சிறிது தூரம் ஓடிய யானை பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.
இதை போல் சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவில் அடுத்த சத்தி -மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஒற்றை யானை ஒன்று நீண்ட நேரமாக சாலையோரம் நின்று கொண்டிருந்தது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனேயே நெடுஞ்சாலையை கடந்து சென்றனர். நீண்ட நேரமாக சாலையோரம் நின்று கொண்டிருந்த அந்த ஒற்றை யானை பின்னர் மீண்டும் வன பகுதிக்குள் சென்றது.
பண்ணாரி தேசிய நெடுஞ்சாலை , தாளவாடி சுற்றுவட்டார பகுதிகளில் ஒற்றை யானை நடமாட்டம் இருப்பதால் இந்த பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டுமென வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் யானைகளின் நடவடிக்கைகளை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.