முல்லைபெரியாற்றில் மாயமான வாலிபர் 2 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு

முல்லை பெரியாற்று பகுதியை கடக்க முயன்ற போது பிரபு தேவா திடீரென மாயமானார்.பிரபுதேவா உடலை பார்த்து கண்ணீர் விட்டு அழுத காட்சி அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.
பிரபுதேவா.
பிரபுதேவா.
Published on

கம்பம்:

தேனி மாவட்டம் கம்பம் அருகே ஆங்கூர் பாளையம் பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 80 வயது மூதாட்டியிடம் சாமாண்டிபுரத்தை சேர்ந்த விஜயகுமார் தவறாக நடக்க முயன்றார். இதுகுறித்த புகாரின்பேரில் கூடலூர் தெற்கு போலீசார் வழக்குபதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

விஜயகுமாரை அடையாளம் காட்ட அதேகிராமத்தை சேர்ந்த வாலிபர்கள் முகிலன், கிருஷ்ணன், அருண்பாண்டி, பிரபுதேவா (வயது 28) ஆகியோரை கூடலூர் போலீசார் சாமாண்டிபுரத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது முல்லை பெரியாற்று பகுதியை கடக்க முயன்ற போது பிரபு தேவா திடீரென மாயமானார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் விஜயகுமாரை தேடுவதை விட்டுவிட்டு திரும்பியுள்ளனர். நீண்டநேரமாகியும் பிரபுதேவா வீடு திரும்பாததால் கம்பம் மெயின்ரோடு காந்திசிலை அருகே மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவம் குறித்து அறிந்ததும் விரைந்து சென்ற போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பிரபுதேவாவை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

முல்லை பெரியாற்றில் நீர் திறப்பை குறைத்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் பிரபுதேவாவை தேடி வந்தனர். இந்த நிலையில் 2 நாட்களுக்குப் பின்னர் இன்று காலை சுருளிபட்டி முல்லை பெரியாற்று பகுதியில் பிரபுதேவா பிணமாக மீட்கப்பட்டார்

உயிரிழந்த பிரபுதேவாவிற்கு உமாமகேஸ்வரி என்ற மனைவியும், ஒரு பெண்குழந்தையும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் பிரபுதேவா உடலை பார்த்து கண்ணீர் விட்டு அழுத காட்சி அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com