

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தேர்தலுக்கு முன்பாகவே தங்களுடன் கூட்டணி வைக்கும் கட்சிகளுக்கு ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு கொடுப்போம் என்றார். அவர் கூறியதை எந்த கட்சியும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதற்கு காரணம் தவெக-வால் தேர்தலில் ஆதிக்கம் செலுத்த முடியாது என்று நினைத்ததுதான். ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்பது தமிழ்நாட்டுக்கு ஒத்து வராது என்றனர்.
தேர்தல் முடிவில் த.வெ.க. 108 இடங்களில் வெற்றி பெற்றது. விஜய் இரண்டு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதனால் த.வெ.க.வின் பலம் 107 ஆக உள்ளது. காங்கிரஸ்-5, இரண்டு இடது சாரிகள்-4, விசிக-2, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-2 ஆகிய கட்சிகள் ஆதரவோடு த.வெ.க. ஆட்சி அமைத்துள்ளது. காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் கட்சிக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்துள்ளது. இதனால் மற்ற சிறிய கட்சிகளுக்கும் ஆட்சியில் பங்கேற்கும் ஆசை ஏற்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, இனிமேல் நாங்கள் தனிச் சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்று தெரிவித்துள்ளார். இவரது கட்சி திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது.
அதேபோல் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், நாம் நினைத்திருந்தால் விஜய்யை பார்த்திருக்க முடியாதா? அமைச்சர் பதவிக்காக ஓடுகிறார்கள். ஆனால் நான் நினைத்திருந்தால் விஜய்யை வீடுதேடி வந்து துணை முதலமைச்சர் பதவி கொடுத்திருப்பார். ஆனால் இதற்கெல்லாம் ஆசைப்படும் கட்சி கிடையாது தேமுதிக என்று கூறியிருந்தார்.
திமுக கூட்டணியில் ம.தி.மு.க. இடம் பிடித்துள்ளது. தி.மு.க. கூட்டணியில் மதிமுக-வுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. மூன்றில் உதயசூரியன் சின்னத்திலும், ஒன்றில் சொந்த சின்னத்திலும் போட்டியிட திமுக கூறியது. பின்னர் 4 தொகுதிகளிலும் திமுக சின்னத்தில் மதிமுக போட்டியிட்டது. இரண்டு இடத்தில் வெற்றி பெற்றது. திமுக-வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதால், விஜய் கட்சிக்கு ஆதரவு கொடுக்க முடியாத நிலை உள்ளது. விஜய்க்கு ஆதரவு கொடுத்து அமைச்சரவையில் இடம் பெற முடியாமல் போன கவலையை துரை வைகோ வெளிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக துரை வைகோ கூறுகையில் “துரதிருஷ்டவசமாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு விட்டோம். உதயசூரியனில் போட்டியிட்டதால் தவெக அரசுக்கு ஆதரவு அளிக்க முடியவில்லை. திமுக கூட்டணியில் மதிமுக தொடர்கிறதா? இல்லையா? என்பது குறித்து 27-ம் தேதி நடக்கும் பொதுக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும். மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினால் கட்சித்தாவல் தடைச்சட்டம் பாயாது” என்றார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “சட்டமன்ற தேர்தலில் உயிரைக்கொடுத்து பிரசாரம் செய்தேன். ஒரு தொகுதியில் நாங்கள் விரும்பும் சின்னத்தில் போட்டியிட விரும்பினோம். அதிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட நிர்பந்தித்தனர். திமுக ஆதரவோடு வெற்றி பெற்ற காங்கிரஸ் நன்றி கூட சொல்லாமல் சென்று தவெக தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றன. காங்கிரசுடன் எங்களை ஒப்பிடாதீர்கள். திமுக தலைமையிலான கூட்டணிக்கு 34 தொகுதிகளில் ஆதரவாக நான் பிரசாரம் செய்த நிலையில் 24 தொகுதியில் வெற்றி பெற்றது.
மற்ற கட்சிகளுக்கு அதிக இடங்கள் கொடுக்கப்பட்டது. எங்களுக்கு 4 இடங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டது. திமுக கூட்டணியில் குறைந்த தொகுதிகள் கொடுத்தது மதிமுக தொண்டர்கள் இடையே வருத்தத்தை ஏற்படுத்தியது. தொண்டர்கள் மனதில் உள்ள வருத்தம், நிர்வாகிகள் என்ன நினைக்கின்றனர் என பொதுக்குழுவில் கருத்து பரிமாறப்படும்” என்றார்.
கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறியபோது, தங்களுடைய வாக்குகள் மூலம் வெற்றி பெற்று, பின்னர் முதுகில் குத்துவிட்டது என்று திமுக வெளிப்படையாக விமர்சனம் செய்திருந்தது.
தற்போது மதிமுக-வும் வெளியேறுவது குறித்து முடிவு எடுக்க உள்ள நிலையில், திமுக தொண்டர்கள், தலைவர்கள் வைகோ மற்றும் துரை வைகோ மீது கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.
வைகோ பிரசாரம் செய்ததன் காரணமாக நாங்கள் ஜெயித்தோம் என்று கூறுகிறார். நாங்கள் உழைத்ததனால்தான் மதிமுக 2 இடத்தில் வெற்றிபெற்றது.
எங்களுடைய தலைவர் தோற்றாலும் மதிமுக-வினரை உதயசூரியனில் நிற்கவைத்து துரதிருஷ்டவசமாக ஜெயிக்க வைத்துவிட்டோமே என நாங்கள்தான் இப்போது குமுறிக் கொண்டிருக்கிறோம். 2024 மக்களவைத் தேர்தலில் திருநாவுக்கரசருக்காக திருச்சி தொகுதியை பிடிவாதமாகக் கேட்டது காங்கிரஸ்.
அப்போது, ராகுலிடம் நேரடியாகவே பேசி திருச்சியை மதிமுக-வுக்காக பெற்றுக் கொடுத்தவர் எங்கள் தலைவர் ஸ்டாலின். அப்போதே, உயிரே போனாலும் தனி சின்னத்தில்தான் போட்டியிடுவேன் என்று சொன்னார் வைகோவின் மகன் துரை.
அதை மனதில் வைத்துக் கொண்டு திமுக-வினர் சுணங்கிவிடக் கூடாதே என கவலைப்பட்ட ஸ்டாலின், ‘துரையை ஜெயிக்க வெச்சுட்டுத்தான் நீங்க சென்னைக்கு வரணும்’ என கே.என்.நேருவிடம் சொன்னார். அதற்குத்தான் இப்போது தனது விசுவாசத்தைக் காட்டி இருக்கிறார் அந்தத் தம்பி.
துரதிருஷ்டவசமாக சூரியனில் நின்றதால் 2 இடத்திலாவது ஜெயித்தார்கள். அதிர்ஷ்டவசமாக அவர்கள் விரும்பிய சின்னத்தில் நின்றிருந்தால் அட்ரஸே இல்லாமல் போயிருப்பார்கள் என்று திமுக-வின் முன்னாள் அமைச்சர் ஒருவர் தனது வேதனையை தெரிவித்துள்ளார்.
துரதிர்ஷ்டவசமாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டுவிட்டோம் என்ற துரை வைகோவின் கூற்றை திமுக-வினரால் ஜீரணிக்க முடியவில்லை.