

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் இன்று காலை சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு உழவர் சந்தையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்குள்ள விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். அங்குள்ள கழிவறைக்கு சென்று அங்கு சுத்தமாக இல்லாத கழிவறையை உடனடியாக சுத்தம் செய்து அதிநவீன கழிவறையாக மாற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
புதிதாக உழவர் சந்தையில் கடைகளை கட்ட வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். பின்னர் அங்குள்ள அம்மா உணவகத்திற்கு சென்றார். நவதானியங்களால் செய்யப்பட்ட உணவுகளை உண்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் சாம்பாரில் காய்கறி ஏன் இல்லை? என அங்கு பணிபுரியும் பணியாளர்களிடம் கேட்டறிந்தார். அதற்கு அவர்கள் கடந்த ஆட்சியில் காய்கறிகள் சரியாக வழங்கப்படவில்லை. ஜெயலலிதா ஆட்சியில் தான் காய்கறிகள் வழங்கப்பட்டதாக தெரிவித்தனர்.
அங்கிருந்த பொதுமக்கள் அம்மா உணவகம் அருகே இருக்கும் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அந்தப் பகுதியையும் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். இது சம்பந்தமாக அங்கிருந்த படியே மதுவிலக்கு துறை அமைச்சர் விக்னேஷிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இது சம்பந்தமாக தெரிவித்தார் .
இதன் தொடர்ச்சியாக திண்டிவனம் மற்றும் மரக்காணம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
நாளை திண்டிவனம் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் அமைச்சர் வன்னிஅரசு பொதுமக்களை சந்தித்து மனுக்கள் பெறுகிறார்.