

நீட் தேர்வை முழுமையாக அகற்ற வேண்டும் என்றும், கல்வி மீண்டும் மாநில பட்டியலுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்பதே த.வெ.க. அரசின் நிரந்தர தீர்வாகவும் நிலைப்பாடாகவும் உள்ளது.
திருச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து இந்து சமய அற நிலையத்துறை அமைச்சர் ரமேஷ், திருச்சி கலெக்டர் பிரதிக் தாயளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சமயபுரம் கோவிலில் பணியில் இருந்த மணியக்காரர் பழனி வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளதாக எழுந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை நேர்மையாக நடைபெற்று குற்றங்களை கண்டறியும் பொருட்டு, நிர்வாக ரீதியான நடவடிக்கையாக அவர் தற்காலிகமாகச் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளார்.
விசாரணையின் முடிவில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் உரிய மேல்நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசு மருத்துவமனைகளில் எலி நடமாட்டம் குறித்த புகார்கள் தொடர்பாக உரிய ஆய்வுகள் நடத்தப்பட்டு, உள்கட்டமைப்பில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
பழனி கோவில் நிலப்பதிவு விவகாரத்தில் தன் மீதும், அரசின் மீதும் வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை. பழனியில் ஒரு நிலம் உள்ளது. அந்த நிலத்தின் மதிப்பு ரூ.100 கோடி மதிப்பு பெறும் என இந்த வழக்கிற்கு பிறகுதான் எனக்குத் தெரியும். அதற்கு முன்பு அதன் மதிப்பு எனக்கு தெரியாது.
ஜூன் 30-ந்தேதியே இந்து சமய அறநிலையத் துறை மூலம் மேல்முறையீடு செய்யப்பட்டு, நீதிமன்றத்தின் மூலம் அந்த நிலம் மீட்கப்பட்டுள்ளது. நிலப்பதிவு ஜூலை 7-ந்தேதி நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரத்தை உடனடியாக சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று முதலமைச்சரிடம் கூறியது நான்தான்.
தற்போது சி.பி.சி.ஐ.டி. முதற்கட்ட விசாரணையை நடத்தி வருகின்றனர். உண்மையான குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள். நீட் தேர்வுக்கு எதிரான மாணவர்களின் போராட்டங்களுக்கு அரசு நியாயமான ஆதரவைத் தெரிவித்துள்ளதாக முதலமைச்சர் தனது இணையதளத்தில் தெளிவாக பதிவிட்டு உள்ளார்.
நீட் தேர்வை முழுமையாக அகற்ற வேண்டும் என்றும், கல்வி மீண்டும் மாநில பட்டியலுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்பதே த.வெ.க. அரசின் நிரந்தர தீர்வாகவும் நிலைப்பாடாகவும் உள்ளது. மாணவர்களின் போராட்டத்தை அரசு மதிக்கிறது. ஆனால், இதற்குள் புகுந்து முதலமைச்சருக்கு எதிராகத் திசைதிருப்ப முயல்பவர்களை அரசு உரிய முறையில் எதிர் கொள்ளும்.
இவ்வாறு அவர் கூறினார்.