திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதில் 2 வருடங்களுக்கு முந்தைய நடைமுறை தொடரும் - அமைச்சர் நிர்மல்குமார்

மதுரை அழகர் கோவில் சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் அனைத்து துறை அதிகாரிகளுடன் அமைச்சர் நிர்மல் குமார் ஆலோசனை நடத்தினார்.
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதில் 2 வருடங்களுக்கு முந்தைய நடைமுறை தொடரும் - அமைச்சர் நிர்மல்குமார்
Published on

முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடு திருப்பரங்குன்றம். இங்கு மலை உச்சியில் அமைந்து உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக சர்ச்சைகள் எழுந்தது. இது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் தீப தூணில் தீபம் ஏற்ற அனுமதித்தனர். ஆனால் கடந்த ஆட்சியில் கோர்ட்டு உத்தரவை ஏற்று தீபம் ஏற்றவில்லை. அதற்கு பதிலாக மேல்முறையீடு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இன்னொரு பக்கம் கோர்ட்டு அவமதிப்பு வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டது. கோர்ட்டு உத்தரவிட்டாலும் மலை உச்சியில் உள்ள தீப தூணில் தீபம் ஏற்றுவதில்லை என்பதில் கடந்த ஆட்சியில் உறுதியாக இருந்தனர்.

இது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் நடந்து வரும் வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கோர்ட்டு அவமதிப்பு வழக்குகள் ஒரு பக்கம் இருக்கட்டும். தீபம் ஏற்றும் உத்தரவை நடைமுறைப்படுத்த அரசு முயற்சிக்கலாமே? இது ஜனநாயக நாடு. மக்கள் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும். கோர்ட்டு உத்தரவை நடைமுறைப்படுத்துவதில் என்ன சிக்கல்? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அரசு தரப்பில் உயர் அதிகாரிகளிடம் ஆலோசிக்க வேண்டியது உள்ளது என்று கூறப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை வருகிற 22-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். எனவே இந்த விவகாரத்தில் அரசின் முடிவு என்ன? கோர்ட்டின் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்ல போகிறது? என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில் மதுரை அழகர் கோவில் சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் அனைத்து துறை அதிகாரிகளுடன் அமைச்சர் நிர்மல் குமார் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏறறும் விவகாரத்தில் கோர்ட்டு உத்தரவு பற்றியும் தற்போது கோர்ட்டு எழுப்பி இருக்கும் கேள்வி பற்றியும் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அமைச்சர் நிர்மல் குமார் கூறியதாவது:-

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மக்கள் அமைதியை விரும்புகிறார்கள். 2 வருடத்துக்கு முன்பு என்ன சூழ்நிலை இருந்ததோ அதையே தான் தொடர வேண்டும் என்று எல்லோரும் விரும்புகிறார்கள். அதுதான் அரசின் கொள்கை. இதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.

கேள்வி:- பெரும்பாலான மக்கள் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று சொல்கிறார்களே?

பதில்:- பெரும்பாலான மக்கள் 2 வருடத்துக்கு முன்பு என்ன சூழ்நிலை இருந்ததோ அந்த அமைதியான சூழ்நிலைதான் வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதையேதான் தொடர வேண்டும் என்று அரசும் நினைக்கிறது.

இதையே அனைவரும் விரும்புகிறோம். இதில் யாரும், எந்த மதவாத சக்தியும் உள்ளே வந்து அரசியல் செய்ய நாங்கள் 100 சதவீதம் அனுமதிக்க மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com