

முதலமைச்சர் விஜய் உத்தரவுபடி பருவமழையை எதிர்கொண்டு தமிழகம் முழுவதும் சுமார் 36 ஆயிரம் நீர்நிலைகளை தூர்வாரி பராமரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சென்னை கோயம்பேடு அருகில் உள்ள கூவம் நதி, துரைபாக்கம், ஒக்கியம் மவுடு பகுதிகளில் தூர்வாரும் பணியினை ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் நேற்று தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
இதை தொடர்ந்து இன்று காலை அமைச்சர் என்.ஆனந்த் மணப்பாக்கம் கிராமம் அடையாறு ஆற்றுப் பகுதியினை தூர்வாரி சீரமைக்கும் பணி, அடுத்ததாக சோழிங்கநல்லூர் வட்டம் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலையின் இணைப்பு மேம்பாலம் அருகே அமைந்துள்ள தெற்கு பக்கிங்ஹாம் கால்வாயில் தூர்வாரி சீரமைக்கும் பணிகளை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
சென்னை நகரின் 3 முக்கிய ஆற்றுப்படுகையில் ஒன்றாகும். அடையாறு ஆறு ஆதனூர் ஏரியில் இருந்து உருவாகி மொத்தம் 42.38கி.மீ நீளத்திற்கு பயணித்து பட்டினம்பாக்கம் சீனிவாசபுரம் அருகில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
சென்னை மாநகராட்சியின் எல்லைக்குள் ஓடும் இந்த ஆற்றில் ஆகாயத் தாமரைகள் மிதவைத் தாவரங்கள் மற்றும் மிதவைப் பொருட்கள் படர்ந்து நீரோட்டத்தை பாதிக்கும் வகையில் உள்ளது.
நீர்வளத்துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனம் இணைந்து தூர்வாரும் பணியை மேற்கொள்வதன் காரணத்தினால் அடையாறு ஆற்றில் விமான நிலைய ஓடுபாதை கீழ் நீரோட்டப்பாதை முதல் திரு.வி.க பாலம் வரை மற்றும் அடையாறு முகத்துவாரத்தில் பணி மேற்கொள்ளப்படுவதால் சென்னை பெருநகர பகுதிகளான மணப்பாக்கம், நந்தம்பாக்கம், கோடம்பாக்கம், ஜாபர்கான்பேட்டை, சைதாப்பேட்டை, கோட்டூர்புரம், மயிலாப்பூர் ஆகிய பகுதிகளில் அடையாறு ஆற்றில் மழை மற்றும் வெள்ள நீர் தங்கு தடையின்றி செல்ல வழிவகை செய்வது ஆகும்.
சோழிங்கநல்லூர் பகுதியில் அமைந்துள்ள தெற்கு பக்கிங்ஹாம் கால்வாயில் அதிக அளவில் ஆகாயத்தாமரை மற்றும் மிதக்கும் பொருட்கள் மேலே உள்ள பள்ளிக்கரனை மற்றும் ஒக்கியமடுவு போன்ற பகுதிகளில் இருந்து நீரோட்டத்தில் அடித்து வரப்பட்டு, நீர் கடத்தும் திறனை குறைக்கின்றது.
எனவே பருவ மழை காலத்திற்கு முன்னர் வெள்ள முன்னெச்சரிக்கை பணியாக, திட்டமிடப்பட்டு அமைச்சர் என்.ஆனந்த் தூர்வாரும் பணிகளை கொடியசைத்து தொடங்கி வைத்து, கள ஆய்வு மேற்கொண்டு விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
முன்னதாக மணப்பாக்கத்தில் ராணுவ அதிகாரிகள் அகாடமி அருகில் நடைபெறும் பாலப் பணியையும் அமைச்சர் ஆனந்த் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க துரிதப்படுத்தினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் விஜய்பாலாஜி, எம்.எல்.ஏ.க்கள் ஈ.சி.ஆர். பி.சரவணன், எம்.ஹரிஷ், நீர்வளத்துறை அரசு முதன்மைச் செயலாளர் முனைவர் சத்யபிரத சாகு, சென்னை மாநகராட்சி ஆணையாளர் மரு. சமீரன், தெற்கு வட்டார துணை ஆணையாளர் ஆப்தாப் ரசூல், சென்னை கலெக்டர் மாலதி ஹெலன், தலைமை பொறியாளர்.எம்.ஜானகி, நீர்வளத் துறை பொறியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் கலந்து கொண்டனர்.