

கர்நாடக அரசின் மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பாக எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு துணை நிற்கும் என வணிகர் சங்கத் தலைவர் விக்கிரமராஜா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
கர்நாடக அரசு, காவிரியின் குறுக்கே மேகதாது அணைகட்ட முனைந்திருக்கும் செயலால் தமிழ்நாடு விவசாயிகளுக்கும், கர்நாடக விவசாயிகளுக்கும் மிகுந்த பாதிப்பை ஏற்படுபடுத்தும் நிலை உருவாகும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தமிழ்நாடு விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாத வகையில் குடிநீர், விவசாயம் சம்பந்தமான அனைத்து நிலவரங்களையும் நிவர்த்தி செய்கின்ற வகையில் ஒரு நிலையான தீர்வுக்கு என்றும் பக்கபலமாக இருக்கும்.
கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதால், கர்நாடக விவசாயிகளுக்கும் எந்தவித பயனும் அளிக்காது. இதனால் கர்நாடக காவிரி பாசன பகுதி விவசாயம் அடியோடு அழியும் நிலையும், மேலும் தமிழ்நாடு நெற்களஞ்சியமான காவிரி டெல்டா பகுதி விவசாய நிலங்கள் அடியோடு நீராதாரமின்றி விவசாய நிலங்கள் பாலைவனமாகும் சூழலும் ஏற்பட வாய்ப்புள்ளது என்ற தொலைநோக்கு சிந்தனையோடு வலியுறுத்துகின்றது.
எனவே, தன்னிச்சையாக கர்நாடக அரசு எந்த ஒரு முடிவு எடுத்தாலும் அது ஏற்கதக்கதல்ல. அதற்கு எதிர்ப்பாக தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பாக எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தோள் கொடுக்கும் என்பதையும், போராட்டக் களத்தில் பங்கேற்கும் என்பதை மிகவும் தெளிவாகவும், உறுதியாகவும் பதிவு செய்வதாக” பேரமைப்பு மாநிலத்தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.