ஊடகங்கள் நாம் தமிழர் கட்சியை தீண்டத்தகாதவர்களாக பார்க்கின்றனர்: சீமான்

நாகலாந்தில் வேலை பார்ப்பவருக்கு எதற்கு தமிழகத்தில் மாநிலங்களவை சீட்டு கொடுக்கிறீர்கள் என சீமான் கேள்வி எழுப்பினார்.
ஊடகங்கள் நாம் தமிழர் கட்சியை தீண்டத்தகாதவர்களாக பார்க்கின்றனர்: சீமான்
Published on

சென்னையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் தேனிசை செல்லப்பாவின் புகழ்வணக்க நினைவேந்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அப்போது அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:-

நான் காங்கிரஸ் பெருமக்களிடம் கேட்கிறேன், நீங்கள் எல்லாம் சோற்றில் உப்பு போட்டு சாப்பிடுகிறீர்களா. உங்களுக்கு மானம், ரோஷம், சூடு, சொரணை, வெக்கம் இதில் ஏதாவது ஒன்று இருக்கிறதா. எல்லாரும் கசங்காத வேட்டி சட்டை மட்டும் கசங்காம கட்டுகிறீர்கள். கொஞ்சமாவது வெக்கம் இருக்கா.

காங்கிரஸ் கட்சியினர் திமுக போட்ட பிச்சையில் 10 எம்பி சீட்டுகள் வைத்துள்ளனர். உண்மையிலேயே மானஸ்தனா இருந்தா பதவியை ரிசைன் பண்ணுங்கள். விலகி இடைத்தேர்தலை சந்தித்து தவெக-வில் போய் நில்லுங்கள்.

தேர்தலுக்கு முன்பு திமுக தயவில் இந்த தேர்தலில் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் சீட்டு வாங்கி இருக்கிறீர்கள். அவர் யார் என்றே தெரியவில்லை. நாகலாந்தில் வேலை பார்ப்பவருக்கு எதுக்கு தமிழகத்தில் மாநிலங்களவை சீட்டு கொடுக்கிறீர்கள்.

ஏன் இந்த இடத்தில் எங்கள் மாமா திருநாவுகரசுக்கோ, ஐயா தங்கபாலுவிற்கோ ஏன் வாய்ப்பு கொடுக்கவில்லை. தற்போது மாநிலங்களவை உறுப்பினராக ஆகியிருப்பவர் மீதியிருக்கும் இரண்டு ஆண்டுகளில் என்ன பேசுவார். இந்த வாக்கு என் மக்களின் வாக்கு.

வீடு வீடாக தட்டு ஏந்துவதற்கும், கட்சிக்கு கட்சி மாறி மாநிலங்களவை சீட்டு வாங்குவதற்கும் என்ன வித்தியாசம் உள்ளது.

வாக்கு முகவர் போட காங்கிரஸ் கட்சிக்கு வக்கு கிடையாது. தனியாக நின்று எந்த இடத்திலாவது கட்டுத்தொகை (deposit) வாங்க முடியுமா? நான் தோற்றாலும் நான்கு விழுக்காடு வைத்துள்ளேன். நீங்கள் வென்றாலும் கூட அது வராது.

பதவி ஏற்ற உடனேயே ஜல் ஜீவன் திட்டத்தில் முதலமைச்சர் கையெழுத்து போட்டுள்ளார். ஒரு நாட்டிற்கு குடிநீர் வழங்குவதற்கு கூட துப்பில்லை.

நமது கட்சி ஊடகத் தீண்டாமையுடன் அணுகப்படுகிறது. ஊடகங்கள் பார்வையில் நாம் தீண்டத்தகாதவர்கள். நான் செய்ய வந்தது தேர்தல் அரசியலோ கட்சி அரசியலோ அல்ல, மக்கள் அரசியல். நான் செய்ய வந்தது செய்தி அரசியலோ, விளம்பர அரசியலோ அல்ல, சேவை அரசியல் மற்றும் செயல் அரசியல்” என்று கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com