பூண்டி அருகே சிறுத்தைப்புலி நடமாட்டமா?: வனத்துறை அதிகாரிகள் ஆய்வு

இறந்த ஆடுகளின் கழுத்து பகுதியில் மர்ம விலங்கு கடித்து இருந்தது.சிறுத்தைப்புலி நடமாட்டத்துக்கு வனத்துறையினர் மறுப்பு தெரிவித்து உள்ளனர்.
பூண்டி அருகே சிறுத்தைப்புலி நடமாட்டமா?: வனத்துறை அதிகாரிகள் ஆய்வு
Published on

திருவள்ளூர்:

பூண்டி ஏரிக்கரை அருகே காட்டுப்பகுதி உள்ளது. இப்பகுதியில் உள்ள மோவூர் கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். பெரும்பாலானோர் வீடுகளில் ஆடு, மாடுகள் வளர்த்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு கிராமத்தைச் சேர்ந்த ரஜினி என்வரின் 8 ஆடுகளை மர்ம விலங்கு கடித்து கொன்றுவிட்டு சென்று விட்டது. இன்று காலை ஆடுகள் இறந்து கிடப்பதை கண்டு ரஜினி அதிர்ச்சி அடைந்தார்.

இறந்த ஆடுகளின் கழுத்து பகுதியில் மர்ம விலங்கு கடித்து இருந்தது. எனவே ஆடுகளை சிறுத்தைப்புலி கடித்து கொன்றுவிட்டு சென்றதாக அப்பகுதியில் தகவல் பரவியது. இதனால் கிராம மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டு உள்ளது. தகவல் அறிந்ததும் வன அலுவலர் விஜயசாரதி தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் மற்றும் பீமன் தோப்பு கால்நடை மருத்துவர் சரவணகுமார், கால்நடை ஆய்வாளர் பாபு ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த ஆடுகளின் உடல்களை ஆய்வு செய்தனர்.

சிறுத்தைப்புலி நடமாட்டத்துக்கு வனத்துறையினர் மறுப்பு தெரிவித்து உள்ளனர். எனினும் சிறுத்தைப்புலி நடமாட்டம் குறித்து வனத்துறை ஊழியர்கள் காட்டுப்பகுதிக்குள் சென்று கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். சிறுத்தைப்புலி கால் தடம் பதிவாகி உள்ளதா என்று பார்வையிட்டு வருகின்றனர். பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். எனினும் மோவூர் கிராம மக்கள் சிறுத்தை புலி பீதியால் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com