பரிதாபமாக காட்சி தரும் கோயம்பேடு பஸ் நிலையம்- சமூக விரோதிகளின் கூடாரமாக மாறுகிறது

ஒரு தலைமுறையே பிரம்மிப்புடன் பார்த்தும், ரசித்தும் பயன்படுத்திய பஸ் நிலையம் இன்று மக்கள் செல்லவே அஞ்சும் இடமாக மாறி இருப்பது காலத்தின் கொடுமை.
கோயம்பேடு பஸ் நிலையம்
கோயம்பேடு பஸ் நிலையம்
Published on

போலீஸ் ரோந்தும் இல்லாததால் பொதுமக்கள் உள்ளே செல்லவே அஞ்சுகிறார்கள். கழிப்பறைகளும் பராமரிக்கப்படாததால் துர்நாற்றம் வீசுகிறது.

கோயம்பேடு பஸ் நிலையம்

வெள்ளி விழா கொண்டாட வேண்டிய கோயம்பேடு பஸ் நிலையம்...

பார்க்க சகிக்காமல் வெட்கி தலைகுனியும் அளவுக்கு அலங்கோலமாக காட்சி அளிப்பது பொதுமக்களை ஆதங்கப்பட வைத்து உள்ளது. சென்னைக்கு வந்தாலே முதலில் நினைவுக்கு வருவது கோயம்பேடு என்ற எண்ணம் பலரது மனதில் நிலைத்து இருக்கிறது. ஒரு காலத்தில் நிமிடத்திற்கு ஒரு பஸ் வந்து சென்ற இடம் இன்று கடந்த கால நினைவுகளை சுமந்து நிற்கிறது.

‘சென்னை தூங்கினாலும், கோயம்பேடு தூங்காது’ என்று சொல்லப்படும் அளவிற்கு 24 மணி நேரமும் இயங்கிய இடமாக இது இருந்தது. கோயம்பேடு பேருந்து நிலையம் என்பது ஒரு கட்டிடம் மட்டுமல்ல. பல லட்சம் மக்களின் வாழ்க்கைப் பயணத்தின் தொடக்கமும் முடிவும் ஆக இருந்தது. ஆனால் இன்று அது பலரையும் கண்கலங்க வைத்து உள்ளது.

பிரமாண்டமான பஸ் நிலையம்

1990-களில் சென்னை நகரம் மிகப்பெரிய போக்குவரத்து நெரிசலை சந்தித்தது. அந்த கால கட்டத்தில் வெளியூர் பஸ்கள், விரைவு பஸ்கள் என எல்லா பஸ்களும் பாரிமுனைக்கு தான் வரும். புதிதாக தனியார் பஸ்களும் அதிக அளவில் வரத் தொடங்கியதால் பாரிமுனையில் சமாளிக்க முடியவில்லை. இதற்காக கோயம்பேட்டில் சுமார் 35 ஏக்கரில் புதிய பஸ் நிலையம் கட்ட தீர்மானித்தார்கள். ரூ.103 கோடி செலவில் பிரமாண்டமான பஸ் நிலையம் அமைக்கப்பட்டு 2002-ம் ஆண்டு திறக்கப்பட்டது.

ஒரே நேரத்தில் 300 பஸ்கள் நிறுத்தும் வசதி, தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து சென்றன. தினமும் சராசரியாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் இந்த பஸ் நிலையத்திற்கு வந்தார்கள். பண்டிகை காலங்களில் இந்த எண்ணிக்கை மேலும் ஒரு மடங்காக அதிகரித்தது.

இந்த பஸ் நிலையம் வெறுமனே பஸ் நிலையமாக தெரியவில்லை. ஆசியாவிலேயே மிகப்பெரிய பஸ் நிலையம் என்று பெயர் பெற்றது. இது மட்டுமல்ல இந்த பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்ட வசதிகள் தமிழகத்திற்கே முன்னோடியாக இருந்தது. விசாலமான காத்திருப்பு மண்டபங்கள், உணவகங்கள், முன்பதிவு மையங்கள், வாகன நிறுத்தும் இடம், போலீஸ் நிலையம், கழிப்பறைகள் என எல்லாமே திட்டமிட்டு வடிவமைத்து நேர்த்தியாக கட்டப்பட்டது.

மெட்ரோ ரெயில்

2015-ல் மெட்ரோ ரெயில் பாதைகள் அமைக்கப்பட்ட போது கோயம்பேடு பஸ் நிலையமும் அத்துடன் இணைக்கப்பட்டது. மெட்ரோ ரெயில்களில் வரும் பயணிகளும் எளிதாக பஸ் நிலையத்திற்குள் வந்து சென்றார்கள். இது பயணிகளுக்கு கூடுதல் வசதியை ஏற்படுத்திக் கொடுத்தது.

அதுமட்டுமல்ல சுற்றிலும் இருந்த ஓட்டல்கள், உணவகங்கள், லாட்ஜிகள் என்று எல்லாமே பொருளாதார ரீதியாக வளர்ச்சி கண்டன.

கோயம்பேடு பஸ் நிலையத்தில் நீண்ட வரிசையில் பஸ்கள் நிற்பது, டிக்கெட் வாங்க கூட்டம் அலைமோதுவது என 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கியது. அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பயணிகள் வந்து சென்றனர். ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுவை ஆகிய மாநிலங்களில் இருந்தும் பஸ்கள் வந்தது என எல்லாமே இன்றும் நினைவில் நிற்கும் காட்சிகள்.

காலத்தின் கொடுமை

ஒரு தலைமுறையே பிரம்மிப்புடன் பார்த்தும், ரசித்தும் பயன்படுத்திய பஸ் நிலையம் இன்று மக்கள் செல்லவே அஞ்சும் இடமாக மாறி இருப்பது காலத்தின் கொடுமை. கோயம்பேடு பஸ் நிலையத்தில் நெரிசல் அதிகரித்து வருவதால் கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு என்ற புதிய பஸ் நிலையத்தை அரசு கட்டியது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் பெரும்பாலான அரசு மற்றும் தனியார் பஸ்கள் அங்கு மாற்றப்பட்டது.

வெளிமாநிலங்கள் உள்பட சில இடங்களுக்கு செல்லும் பஸ்கள் மாதவரத்திற்கு மாற்றப்பட்டது. சென்னை அருகில் உள்ள சில வழித்தட பஸ்கள் மட்டுமே கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படுகிறது. இதனால் கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு பயணிகள் வருகை பெருமளவு குறைந்தது.

தற்போது வார நாட்களில் தினமும் குறைவான பயணிகள் மட்டுமே இங்கிருந்து பஸ்களில் செல்கிறார்கள். முன்பு வார நாட்களில் 5 ஆயிரம் முதல் 8 ஆயிரம் பேர் வரை முன்பதிவுகள் செய்த நிலையில் தற்போது பெங்களூரு, ஓசூர், சேலம், தர்மபுரி, திருப்பதி உள்ளிட்ட சில வழித்தடங்களுக்கு மட்டும் சுமார் 300 முன்பதிவுகள் நடக்கிறது.

கட்டிடங்கள் சிதிலம்

பஸ் நிலையம் வெறிச்சோடி கிடப்பதால் அங்கு வரும் பயணிகளும் பாதுகாப்பற்ற நிலையை உணர்கிறார்கள். முன்பு இரவு நேரங்களில் மின்னொளியில் ஜொலித்த இந்த பஸ் நிலையம் இப்போது பல கடைகள் மூடப்பட்டு விட்டதால் ஆங்காங்கே ஒரு சில மின் விளக்குகள் மட்டுமே எரிவதால் களை இழந்து விட்டது. பஸ் நிலையத்திற்குள் வீடு இல்லாதவர்கள், தெருவோரங்களில் வசிப்பவர்கள், வெளிமாநில கூலி தொழிலாளர்கள் என்று பலரும் தங்குகிறார்கள். முன்பெல்லாம் எப்போதும் பயணிகள் கூட்டத்தால் கோயம்பேடு கலகலப்பாக இருந்ததால் சமூக விரோத செயல்களும் நடப்பதில்லை. ஆனால் இப்போது ஒரு சிலர் மட்டும் இரவு நேரங்களில் பஸ்சுக்காக செல்லும் போது வழிப்பறி மற்றும் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள்.

போலீஸ் ரோந்தும் இல்லாததால் பொதுமக்கள் உள்ளே செல்லவே அஞ்சுகிறார்கள். கழிப்பறைகளும் பராமரிக்கப்படாததால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் வெளிப்பகுதியில் சிறுநீர், மலம் கழித்து விட்டு செல்வதால் கால் வைத்து நடக்க முடியவில்லை. எந்த பக்கத்தில் திரும்பினாலும் சிகரெட் துண்டுகள், மதுபான பாட்டில்கள், குப்பைகள் சிதறி கிடக்கின்றன. கட்டிடங்களும் சிதிலம் அடைய தொடங்கி விட்டது.

இந்த பகுதியில் இரவு நேரத்தில் செல்போன்கள் பறிப்பது, கையில் கொண்டு செல்லும் பொருட்களை அடித்து பிடுங்கிக் கொண்டு செல்வது போன்ற புகார்கள் அடிக்கடி வருவதாக போலீஸ் தரப்பிலும் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனாலும் டவுண் பஸ்கள் நிற்கும் இடங்களில் மட்டும் ஒரு சில போலீசார் ரோந்து செல்வதால் மற்ற பகுதிகள் பெரும்பாலும் சமூக விரோதிகளின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருக்கிறது.

வாகனம் நிறுத்தும் இடம்

வாகனம் நிறுத்தும் இடம் காலையில் மட்டுமே செயல்படுகிறது. தர்மபுரிக்கு செல்லும் பயணியை பஸ் ஏற்றி விடுவதற்கு இரவில் காரில் வந்தவரை கார் நிறுத்துவதற்கு அனுமதிக்கவில்லை. காலை 5 மணிக்கு பிறகுதான் பார்க்கிங் செயல்படத் தொடங்கும். அதுவரை வெளியே காரை நிறுத்தி காத்திருங்கள் என்று சொன்னதாக ஆதங்கத்துடன் கூறினார்.

ஒரு காலத்தில் கூட்டத்தின் அடையாளமாக பார்க்கப்பட்ட இடம் இன்று அமைதி குடிகொண்டுள்ள இடமாக காட்சி அளிக்கிறது. கோயம்பேட்டின் வரலாறு குறையவில்லை. ஆனால் பயணிகளின் காலடி சத்தம் மட்டும் குறைந்துவிட்டது.

நல்ல திட்டமிடல் இருந்தும் போதிய பயன்பாடு இல்லாமல் போனது துரதிருஷ்டம். பராமரிப்பு இல்லாததால் கோடிக்கணக்கில் கொட்டி கட்டப்பட்ட பிரமாண்டம் இப்போது சிதைந்து கொண்டு இருக்கிறது. சுகாதாரம், கழிவறை பராமரிப்பு இல்லாததால் சுற்றுச்சூழல் சீர்கேடும் அரங்கேறுகிறது. இந்த பகுதியில் உள்ள சிறுவியாபாரிகளின் வருமானம் கடுமையாக பாதித்து உள்ளது.

‘பஸ்களின் இரைச்சல் குறைந்தாலும், கோயம்பேட்டின் கதைகள் இன்னும் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன.’

‘கோயம்பேடு என்பது வெறும் பஸ் நிலையமல்ல, ஒரு தலைமுறையின் பயண நினைவகம்’.

X

Maalai Malar
www.maalaimalar.com