

தமிழ்நாட்டின் கீழடி மற்றும் ஆதிச்சநல்லூர் பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளின் மனித டி.என்.ஏ பகுப்பாய்வில், அங்கு வசித்தவர்கள் தென்னிந்திய, இலங்கைத் தமிழ் மற்றும் தெற்காசிய வம்சாவளியினருடன் நெருங்கிய மரபணுத் தொடர்பைக் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.
மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தின் மரபியல் துறையில் உள்ள பண்டைய டிஎன்ஏ ஆய்வகம், முக்கிய தொல்பொருள் தளங்களிலிருந்து சிதைந்த டிஎன்ஏ மாதிரிகளிலிருந்து 75,000-க்கும் மேற்பட்ட தரவுகளை பகுப்பாய்வு செய்த பின்னரே இந்த கண்டுபிடிப்புகளை எட்டியுள்ளது.
இதுகுறித்து மரபியல் துறைத் தலைவர் பேராசிரியர் ஜி. குமரேசன் கூறுகையில், “கீழடி மக்கள் பயன்படுத்தி வந்த சுடுகாடான கொந்தகையிலிருந்து சுமார் 75,000 தரவுகளும், ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகலையில் உள்ள டி.என்.ஏ மாதிரிகளிலிருந்து முறையே சுமார் 9,000 மற்றும் 6,000 தரவுகளையும் நாங்கள் பிரித்தெடுத்துள்ளோம்.
இந்த தரவுகள் தென்னிந்தியர்கள், இலங்கையர்கள் மற்றும் தெற்காசியர்களுடன் நெருங்கிய தொடர்புடைய அல்லீல் அதிர்வெண்களைக் (allele frequencies) காட்டுகின்றன.
நாங்கள் மேலும் பல தரவுகளை பிரித்தெடுத்து பதப்படுத்த விரும்புகிறோம். மேலும் சில மாதிரிகளிலிருந்தே அதைச் சாதித்துவிடுவோம் என்பதில் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்.
பல்வேறு முறைகளை பயன்படுத்தி பல நடவடிக்கைகளை மேற்கொண்டு, அதைச் சாதித்துவிடுவோம் என்பதில் நாங்கள் நம்பிக்கையுடன் உள்ளோம்.
நாங்கள் மேலும் இரண்டு சுற்றுகளுக்கு செல்வோம், தரவுகள் உறுதியானவுடன், அதன் கண்டுபிடிப்புகளை சர்வதேச இதழ்களில் வெளியிடுவோம்.
ஆராய்ச்சியை முன்னோக்கி எடுத்து செல்வதற்காக, அதன் கண்டுபிடிப்புகளையும் தரவுகளையும் பொதுமக்களுக்கு வெளியிட விரும்புகிறோம்.
சங்க இலக்கியம் எங்களுக்கு பெரும் உதவியாக இருக்கிறது. அதன் குறிப்புகளைப் பயன்படுத்தி பல விஷயங்களில் எங்களால் ஒரு முடிவுக்கு வர முடிகிறது. அது இல்லாமல், இந்தப் பணி மிகவும் கடினமாக இருந்திருக்கும்,” என்று அவர் கூறினார்.
கீழடி என்பது இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையைச் (ASI) சேர்ந்த கே. அமர்நாத் ராமகிருஷ்ணாவால் 2014-ல் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சங்க கால தளமாகும். இது கார்பன் காலக்கணிப்பின்படி 2,600 ஆண்டுகள் பழமையானது எனத் தேதியிடப்பட்டுள்ளது.
சிவகலையில் கண்டெடுக்கப்பட்ட இரும்புக் கருவிகள் கி.மு. 3345-ஆம் ஆண்டைச் சேர்ந்தவை எனத் தேதியிடப்பட்டுள்ளன. இதன் மூலம், உருக்கப்பட்ட இரும்பிற்கான அறியப்பட்ட மிகப்பழமையான தேதிகளில் ஒன்றாக இது திகழ்கிறது.
டிஎன்ஏ பகுப்பாய்வுக்கு இணையாக, மனித இடம்பெயர்வைத் தவிர, வளர்ப்பு விலங்குகள் மற்றும் கால்நடைகளின் இனங்களையும், அதன் மூலம் அவற்றின் இடம்பெயர்வு முறையையும் அடையாளம் காண்பதற்காக, அந்த ஆய்வகம் புரதங்களையும் வரிசைப்படுத்தியுள்ளது.
பயன்படுத்தப்பட்ட பானைகளில் கொலஸ்ட்ரால் இருப்பது, அங்கு வசித்த மக்கள் இறைச்சியை உட்கொண்டனர் என்பதற்கு சான்றாக அமைகிறது.
புதிய உயிர்வேதியியல் பகுப்பாய்வுகள், பண்டைய தமிழர்கள் பல்வேறு வகையான அரிசி மற்றும் தினையைப் பயிரிட்டு, குறைந்தது 2,500 ஆண்டுகளுக்கு முன்பே நுட்பமான சமையல் மரபுகள் தோன்றியதைக் காட்டி, பண்டைய விவசாயப் பழக்கவழக்கங்களை வெளியே கொண்டுவந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகலை ஆகிய இடங்களிலிருந்து பெறப்பட்ட அரிசி மாதிரிகளிலும், கொடுமணலில் இருந்து பெறப்பட்ட தினையிலும் கண்டறியப்பட்ட கரிம மூலக்கூறுகள், நெய், பீன்ஸ், கீரை, பால், வெள்ளரிக்காய், நிலக்கடலை மற்றும் தேங்காய் ஆகியவற்றுடன் அரிசி உட்கொள்ளும் ஒரு உணவுமுறையை வெளிப்படுத்துகின்றன.
குறுந்தொகை, புறநானூறு, அகநானூறு, பொருநராற்றுப்படை உள்ளிட்ட சங்க இலக்கிய மேற்கோள்களை பயன்படுத்தி இந்தக் கருத்துக்கள் மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.