

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட அரசுப்பணி உத்தரவு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
கரூர் வேலுசாமிபுரத்தில், கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதியன்று நடைபெற்ற த.வெ.க. பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, கடந்த ஜூலை 10-ஆம் தேதியன்று கரூர் சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் கூட்டநெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சேர்ந்த 31 பேருக்கு அரசுப்பணி ஆணைகளை வழங்கினார்.
எனினும், இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மதுரை அமர்வு, தமிழக அரசால் வழங்கப்பட்ட அரசுப்பணி உத்தரவை ரத்து செய்தது. இந்த விவகாரம் குறித்து விரைவில் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்யும் என்று தமிழ்நாடு சட்டத்துறை சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்தார்.
இந்த நிலையில், கரூர் கூட்டநெரிசலில் சிக்கி பலியானோர் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட அரசுப்பணியை ரத்து செய்த உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு இன்று (ஜூலை 29) உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.