

விவசாயத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறந்துவிடுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு அணையில் போதிய நீர் இல்லாததால் மேட்டூர் அணை திறக்கப்படவில்லை. காவிரி நதிநீர் ஆணைய உத்தரவுபடி தமிழகத்துக்குரிய நீரை திறந்துவிட கர்நாடகம் மறுத்து வருவதால் டெல்டா மாவட்டங்கள் வறண்டு வருகின்றன.
இந்த விவகாரம் தற்போது இரு மாநிலங்களுக்கு இடையே பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. இதற்கிடையே தமிழகத்துக்கு 4 டி.எம்.சி. (நாள் ஒன்று 3500 கனடி வீதம் 15 நாட்களுக்கு) நீர் திறந்துவிட கர்நாடகத்துக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. இதற்கு கர்நாடகம் மறுத்துவிட்டது. தொடர்ந்து கன்னட அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன. இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கிடையே இந்த பிரச்சனைக்கு தீர்வு காண இயற்கையே தற்போது கைகொடுத்துள்ளது.
கபினி அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்தது.
கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி உயரம் கொண்ட கபினி அணையில் நேற்று முன்தினம் 2,282 அடி தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 11,747 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணை நிரம்பும் தருவாயில் இருந்ததால், அணையில் இருந்து வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் காவிரியில் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டது.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகள் மற்றும் வயநாடு பகுதியில் பெய்து வந்த கனமழையின் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்தது. கபினி அணையில் இருந்து நேற்றிரவு 25 ஆயிரம் கன அடியாக திறக்கப்பட்ட நிலையில், இன்று காலை நிலவரப்படி காவிரி ஆற்றில் விநாடிக்கு 10,000 கன அடியாக குறைக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீர், கர்நாடக-தமிழக எல்லையான 'பிலிகுண்டுலு' பகுதி வழியாக தமிழகத்திற்கு வந்தடையும்.
இந்த உபரிநீர் அடுத்த சில நாட்களில் சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு வந்து சேரும் என நீர்வளத் துறை அதிகாரிகள் எதிர்பார்த்துள்ளனர். காவிரி ஆற்றுப் படுகை மற்றும் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ அல்லது கால்நடைகளை மேய்க்கவோ வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் மற்றும் நீர்வளத் துறை சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.