அந்த ஜான் பிரிட்டோ வேற, நான் வேற: விளக்கம் அளித்த லீமா ரோஸ் சகோதரர்

தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய நிர்வாகியும், அமைச்சருமான ஆதவ் அர்ஜுனாவின் மாமியார் லீமா ரோஸ்.
அந்த ஜான் பிரிட்டோ வேற, நான் வேற: விளக்கம் அளித்த லீமா ரோஸ் சகோதரர்
Published on

பிரபல யூ டியூபர் மாரிதாஸ் நேற்று கைது செய்யப்பட்டார். போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக யூ டியூபில் செய்திகள் வெளியிட்டதற்காகவே மாரிதாஸ் கைது செய்யப்பட்டார் என சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது. இந்த வழக்கில் லீமா ரோஸ் சகோதரர் ஜான் பிரிட்டோவுக்கு சம்பந்தம் உள்ளது என பேசப்பட்டது.

பணமோசடி மற்றும் ரூ. 258 கோடி மதிப்பிலான சர்வதேச போதைப் பொருள் கடத்தல் வழக்கு சம்பந்தமாக அமலாக்கத்துறை சமீபத்தில் சோதனை நடத்தியது. இந்த வழக்கில் ஜான் பிரிட்டோ என்பவரே மூளையாக செயல்பட்டுள்ளார் என அமலாக்கத்துறை தெரிவித்தது. இதையடுத்து, ஜான் பிரிட்டோவுக்கும் ஆதவ் அர்ஜுனாவுக்கும் தொடர்புள்ளது என கூறப்பட்டது.

அதிமுக சட்டமன்ற உறுப்பினரான லீமா ரோஸ் சகோதரர் பெயரும் ஜான் பிரிட்டோ. தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய நிர்வாகியும், அமைச்சருமான ஆதவ் அர்ஜுனாவின் மாமியார் லீமா ரோஸ் என்பதால் ஜான் பிரிட்டோ குறித்து அ.தி.மு.க. ஐடி விங் சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தது.

இந்நிலையில், அ.தி.மு.க.வின் லால்குடி சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோசின் சகோதரர் ஜான் பிரிட்டோ இன்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்தார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

நேத்து தான் போதைப்பொருள் வழக்குடன் எனது பெயரினை குறிப்பிட்டுச் செய்திகள் வந்ததைப் பார்த்தேன்.

கேரளாவில் என்மீது லாட்டரி கேஸ் மட்டுமே உள்ளது. இந்தப் புகாருக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை.

அத்துடன், அந்த கேசை எடுத்து அமலாக்கத்துறை வழக்குடன் தொடர்புபடுத்தி பொய் பிரச்சாரம் செய்கிறார்கள்.

என் பெயரை கெடுக்கவேண்டும் என்றே இதையெல்லாம் செய்கிறார்கள்.

கேரளாவில் உள்ள லாட்டரி கேசில் எனது பெயர், சகோதரி லீமா ரோஸ், மச்சான் பெயரெல்லாம் உள்ளது.

அதற்கான வாய்தாக்களை எல்லாம் நாங்கள் அட்டென்ட் பண்ணி வருகிறோம். போதைப்பொருள் கேஸ் கிடையாது.

சம்பந்தம் இல்லாமல் குற்றச்சாட்டுகளைப் பரப்புகிறார்கள். சட்டரீதியாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

சமூக வலைதளத்தில் தன்னை பற்றிய பரவிய செய்திகள் அனைத்தையும் நீக்குமாறும் புகார் அளித்துள்ளேன்.

அந்த ஜான் பிரிட்டோ வேற. நான் வேற. என்னையும், என் சகோதரி லீமா ரோஸ் மற்றும் மச்சான் பற்றி தப்பான செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள். இதையெல்லாம் தவிர்க்க வேண்டும்.

இந்தப் பொய் புகார் காரணமாக தொழில், அரசியல் எல்லாம் பாதிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com