காங்கிரஸ் நிர்வாகி மரணம் சட்ட - ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்: எடப்பாடி பழனிசாமி

விடியா திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது.ஜெயக்குமார் தன்சிங் மரணத்தில் தொடர்பு உள்ளவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்.
காங்கிரஸ் நிர்வாகி மரணம் சட்ட - ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்: எடப்பாடி பழனிசாமி
Published on

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் 2 நாட்களாக மாயமான நிலையில், இன்று வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

உடலை மீட்ட போலீசார் இது கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜெயக்குமாரின் மரணத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தன்சிங் அவர்கள் 2 நாட்களாக காணவில்லை என்று அவரது மகன் புகார் அளித்திருந்த நிலையில், அவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன். அன்னாரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.

இந்த விடியா திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதை நான் தினந்தோறும் சுட்டிக்காட்டி வருகிறேன். தற்போது, ஒரு தேசிய கட்சியின் மாவட்டத் தலைவர் பொறுப்பில் உள்ளவரே எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்படுவது சட்டஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்.

தமிழ்நாட்டில் எந்தவொரு குற்றச்செயலையும் சட்டத்தின் மீதோ காவல்துறையின் மீதோ எந்தவித அச்சமுமின்றி சமூக விரோதிகள் செய்யத் துணிந்துவிட்டனர். இந்த ஆட்சியும் அதற்கேற்றாற்போலவே சட்டம் ஒழுங்கின் மீது எந்த அக்கரையுமின்றி கும்பகர்ண தூக்கத்தில் இருக்கிறது.

ஜெயக்குமார் தன்சிங் மரணத்தில் தொடர்பு உள்ளவர்களை உடனடியாக கைது செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், இனி இதுபோன்ற குற்றங்கள் நிகழாவண்ணம் சட்டம் ஒழுங்கை காக்க ஆக்கப்பூர்வத்துடன் செயல்படுமாறு விடியா அரசின் பொம்மை முதல்வரை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com