'ஜனநாயகன்' திரைப்படத்தால் வெளிச்சத்திற்கு வந்த கொடுமை: போக்சோ சட்டத்தில் சிக்கிய முதியவர்!

விசாரணையில் குற்றச்சாட்டு உறுதியானதால் சண்முகப்பிரியனை போலீசார் கைது செய்தனர்.
Girl harassment
Published on

8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, தாய் வேலை செய்து வந்த வீட்டின் உரிமையாளரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

வீட்டு வேலை

சென்னை கே.கே. நகரைச் சேர்ந்த தம்பதியினர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களாக பிரிந்து வசித்து வருகின்றனர். இவர்களது 11 வயது மகனும், 8 வயது மகளும் தந்தையுடன் வசித்து வருகின்றனர்.

குழந்தைகளின் தாய், கோடம்பாக்கத்தில் உள்ள சண்முகப்பிரியன் (வயது 50) என்பவரது வீட்டில் வேலை செய்து வருகிறார். அவர் அவ்வப்போது தனது குழந்தைகளை அந்த வீட்டுக்கு அழைத்து வந்து தன்னுடன் தங்க வைத்ததாக கூறப்படுகிறது.

சிறுமிக்கு பாலியல் சீண்டல்

இந்த நிலையில், சிறுமியை அவரது தந்தை, முதலமைச்சர் விஜய் நடித்த 'ஜனநாயகன்' திரைப்படத்தை பார்க்க அழைத்துச் சென்றார். அந்த படத்தில் குழந்தைகளுக்கு 'நல்ல தொடுதல், கெட்ட தொடுதல்' குறித்து விஜய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் காட்சி இடம்பெற்றுள்ளது.

அந்த காட்சியை பார்த்த சிறுமி, தனது தந்தையிடம், "நான் ஒரு விஷயம் சொல்ல வேண்டும். என்னை திட்டக்கூடாது" என்று கூறிவிட்டு, தாய் வேலை செய்யும் வீட்டில் தங்கியிருந்தபோது. அந்த வீட்டின் உரிமையாளர் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.

உரிமையாளர் கைது

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தந்தை, வடபழனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் குற்றச்சாட்டு உறுதியானதால் சண்முகப்பிரியனை போலீசார் கைது செய்தனர்.

அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஜனநாயகன்

'ஜனநாயகன்' திரைப்படத்தில் இடம்பெற்ற விழிப்புணர்வு காட்சியால் சிறுமி தைரியமாக நடந்த சம்பவத்தை வெளிப்படுத்தியதை தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டு வெளிச்சத்துக்கு வந்து, போலீசார் நடவடிக்கை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com