

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களை கைப்பற்றி தனி பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதனை அடுத்து கூட்டணி கட்சிகளுடன் த.வெ.க ஆட்சி அமைத்து விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றார் .
இதனை அடுத்து தமிழக வெற்றி கழகத்தில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், முக்கிய பொறுப்பில் உள்ள நிர்வாகிகள் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக இருக்கும் யுவராஜா அந்தக் கட்சியிலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைய உள்ளதாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் செய்தி வேகமாக பரவி வருகிறது. கடந்த வாரம் சென்னை சென்ற யுவராஜா தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான புஸ்சி ஆனந்தை சந்தித்து இது தொடர்பாக பேசியதாகவும் தகவல் வேகமாக பரவியது .
ஈரோடு மாவட்டம் மேற்கு தொகுதிக்குட்பட்ட வில்லரசம்பட்டியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார் யுவராஜா. 2001 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் தேசிய மாணவர் ஒன்றிய மாநில செயலாளர் பதவி வகித்தார். அதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் இருந்து மூப்பனார் வெளியேறி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். அதைத்தொடர்ந்து யுவராஜா தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்தார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் முக்கிய தலைவராக யுவராஜா இருந்து வருகிறார்.
2014-ம் ஆண்டு முதல் 2024 -ம் ஆண்டு வரை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இளைஞர் அணி தலைவராக பதவி வைத்தார். அதன் பிறகு தற்போது வரை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். யுவராஜா 2011 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
அதைத்தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு அதிமுக கூட்டணி சார்பில் யுவராஜா ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.திருமகன் ஈ.வெ.ரா.விடம் 8500 வாக்கு வித்தியாசத்தில் யுவராஜா தோல்வி அடைந்தார்.
தொடர்ந்து யுவராஜா கட்சி பணியாற்றி நலத்திட்ட உதவிகளும் செய்து வந்தார்.
இந்நிலையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சி சார்பில் மீண்டும் யுவராஜா ஈரோடு மேற்கு தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் முத்துசாமியை எதிர்த்து போட்டியிட்டார். தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் ஆனந்த மோகனும் களத்தில் இருந்தார்.
ஆனால் இந்த தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் த.வெ.க. ஆனந்த மோகன் வெற்றி பெற்றார். முன்னாள் அமைச்சர் முத்துசாமி இரண்டாம் இடம் பிடித்தார். யுவராஜா 34,000 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்து தோல்வி அடைந்தார்.
இந்நிலையில் தான் யுவராஜா தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தமிழக வெற்றி வெற்றி கழகத்தில் தனது ஆதரவாளர்களுடன் இன்னும் ஓரிரு நாளில் இணை உள்ளதாக தகவல் வேகமாக பரவி வருகிறது . ஆனால் இது குறித்து உறுதிப்படுத்த முடியவில்லை. இன்னும் ஓரிரு நாளில் இந்த தகவல் உண்மைதானா அல்லது வழக்கம் போல் வதந்தியா என தெரிந்துவிடும். இதனால் ஈரோடு அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.