பூட்டி கிடந்த வீட்டில் மர்ம பொருள் வெடித்ததால் பரபரப்பு- நாட்டு வெடிகுண்டா? என போலீசார் விசாரணை

கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளியூர் சென்றிருப்பதை அறிந்தனர். சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.
பூட்டி கிடந்த வீட்டில் மர்ம பொருள் வெடித்ததால் பரபரப்பு- நாட்டு வெடிகுண்டா? என போலீசார் விசாரணை
Published on

மதுரை:

மதுரை மாநகரருக்கு உட்பட்ட கரிமேடு விஸ்வசாபுரி 1-வது தெரு பகுதியை சேர்ந்தவர் அஜித். தனியார் நிறுவனத்தில் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வரும் இவர் அங்குள்ள ஒரு வாடகை வீட்டில் தனது மனைவியுடன் வசித்து வருகிறார்.

இந்தநிலையில் நேற்று இரவில் அஜித்தின் வீட்டிற்குள் இருந்து திடீரென பயங்கர வெடி சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து அக்கம்பக்கத்தில் வசித்தவர்கள் பதறியடித்து எழுந்தனர்.

பின்னர் தங்களது வீட் டிற்கு வெளியே வந்து அச்சத்துடன் பார்த்தனர். முதலில் அவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

மேலும் வெடிச்சத்தம் கேட்ட அஜித்தின் வீட்டிற்குள் இருந்து நெடியுடன் கூடிய புகை வெளிவந்துள்ளது. மேலும் உடனடியாக இதுபற்றி அப்பகுதியினர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர்.

ஆனால் வீட்டில் யாரும் இல்லை. அப்பகுதியில் விசாரித்தபோது கடந்த 2 நாட்களுக்கு முன்பு அஜித் வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளியூர் சென்றிருப்பதை அறிந்தனர். பின்னர் பூட்டை உடைத்த போலீசார் உள்ளே சென்று பார்த்தனர்.

அங்கு மர்ம பொருள் வெடித்து அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்கள் சிதறிய நிலையில் கிடந்தது. சமையல் அறையில் இருந்த பொருட்களும் சேதமடைந்து கருகிய நிலையில் கிடந்தது. இதனையடுத்து போலீசார் அஜித்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொள்ள முயன்றபோது தொடர்பு கொள்ள முடியவில்லை.

வீட்டிற்குள் வெடித்தது நாட்டு வெடிகுண்டா? அல்லது வேறு ஏதேனும் வெடிக்கும் மர்ம பொருளா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் கரிமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com