மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு- 11 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

காவிரி டெல்டா பாசனத்துக்காக கடந்த 12-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தண்ணீரை திறந்து வைத்தார்.மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது.
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு- 11 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
Published on

மேட்டூர்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்துள்ளது. ஒகேனக்கல் காவிரியில் 17-வது நாளாக இன்றும் நீர்வரத்து விநாடிக்கு 1000 கன அடியாக நீடிக்கிறது.

மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 176 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 126 கனஅடியாக சரிந்துள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக கடந்த 12-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தண்ணீரை திறந்து வைத்தார். முதலில் 3 ஆயிரம் கனஅடி வீதம் திறந்துவிடப்பட்ட தண்ணீர், அன்று இரவு விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

நேற்று மதியம் வரை விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. தற்போது, காவிரி டெல்டா பாசனத்திற்கான தண்ணீர் தேவை அதிகரித்துள்ளது. இதையடுத்து, நேற்று மதியம் முதல், அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு விநாடிக்கு 11 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

தண்ணீர் வரத்தை காட்டிலும், பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு அதிகமாக இருப்பதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று 94.10 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், இன்று காலை 8 மணி நிலவரப்படி 93.32 அடியாக சரிந்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com