மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.அணையின் நீர்மட்டம் 63.83 அடியாக உயர்ந்துள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
Published on

கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. கடலோர மாவட்டங்கள் மற்றும் மலை மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் மழையின் காரணமாக பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. குடகு மாவட்டத்தில் தயார் நிலையில் பேடரிடர் மீட்பு குழுவினர் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் அங்குள்ள பல்வேறு ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் காவிரி மற்றும் பல்வேறு ஆறுகளின் கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரித்து காணப்படுவதால் தமிழக எல்லையான பிலிகுண்டு பகுதிக்கு இன்று காலை வினாடிக்கு 61 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இதன் காரணமாக ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இந்த தண்ணீர் நேரமாக காவிரி ஆற்றில் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 44 ஆயிரத்து 353 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று காலை 53 ஆயிரத்து 98 கனஅடியாக அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 61.31 அடியாக உயர்ந்தது.

இந்நிலையில் இன்று மதியம் முதல் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 1000 கனஅடி உயர்ந்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 68,843 கன அடியாக அதிகரித்துள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 63.83 அடியாக உயர்ந்துள்ளது. மேலும் குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து 1000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com