பொக்காபுரம் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா- படுகர் இன மக்கள் நடனமாடி ஆரவாரம்

திருவிழாவை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.4 நாட்கள் நடந்த இந்த திருவிழாவிற்காக 20-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
தேர்த்திருவிழாவையொட்டி சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய மாரியம்மன்.
தேர்த்திருவிழாவையொட்டி சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய மாரியம்மன்.
Published on

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் பொக்காபுரம் என்ற அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி இந்த கோவில் அமைந்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் இந்த கோவிலில் 5 நாள் தேர்த்திருவிழா நடைபெறும். ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த கோவில் திருவிழாவில் நீலகிரி மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கேரளா, கர்நாடகா உட்பட வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம்.

பழங்குடியின மக்கள் மற்றும் படுகர் சமுதாய மக்களால் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழாவை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

அப்போது அமைச்சருக்கு பழங்குடியி னர் மக்களின் பாரம்பரிய இசையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 4 நாட்கள் நடந்த இந்த திருவிழாவிற்காக 20-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி இரவு 10.30 மணிக்கு பல்வேறு சிறப்பு பூஜைகளுடன் மாரியம்மன் சிம்ம வாகனத்தில் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். நிகழ்ச்சியில் கலெக்டர் அருணா கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.

தேர் திருவிழாவில் மேள தாளங்கள் முழங்க, படுகர் இன மக்கள் அவர்களின் மொழிப் பாடல்களைப் பாடி நடனமாடி பங்கேற்றனர்.

வடம் பிடிக்கப்பட்ட தேர், கோவிலை இரண்டு முறை சுற்றி வந்தது. அப்போது வழிநெடுகிலும் தேரில் பவனி வந்த மாரியம்மனுக்கு, பக்தர்கள் உப்பை இறைத்து வேண்டுதல்களை நிறைவேற்றி வழிபட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com