சட்டவிரோத பட்டாசு ஆலைவிபத்து - உயிரிழப்பு 4ஆக உயர்வு - 11 பேர் கைது!

அருகில் உள்ள பட்டாசுக் கடையின் உரிமையாளர் சட்டவிரோதமாக இந்த ஆலையையும் நடத்தி வந்துள்ளார்.
சட்டவிரோத பட்டாசு ஆலைவிபத்து - உயிரிழப்பு 4ஆக உயர்வு - 11 பேர் கைது!
Published on

சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. ராம்பிரகாஷ், இன்னாசி முத்து, ஐயப்பராஜ் மற்றும் பாண்டித்துரை ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 11 பேரை கைது செய்துள்ளனர்.

சட்டவிரோத பட்டாசு தொழிற்சாலை

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பகுதியில் விவசாய நிலத்தில் உள்ள தகரக் கொட்டகை ஒன்றில், சட்டவிரோத பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வந்துள்ளது. இங்கு காலை மற்றும் மாலை என இருவேளைகளிலும் பட்டாசு தயாரிக்கப்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் வழக்கம்போல இன்று காலை இங்கு 5 தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் தீயணைப்புப் பணிகளை தொடங்கியுள்ளனர்.

அப்போது இடுபாடுகளில் சிக்கி கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளான மற்றொரு தொழிலாளி மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்தவர்கள் ராம்பிரகாஷ், இன்னாசி முத்து, ஐயப்பராஜ் மற்றும் பாண்டித்துரை என அடையாளம் காணப்பட்டுள்ளனர். ராமச்சந்திரன் என்பவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வெடிப்புக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. காவல்துறை மற்றும் பிற அதிகாரிகள் இச்சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

11 பேர் கைது

இந்நிலையில் பள்ளபட்டியை சேர்ந்த திருப்பதி என்பவர் இந்த பட்டாசு ஆலையை நடத்தி வந்தது கண்டறியப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக பட்டாசு கடை உரிமையாளரான திருப்பதி (37), திருத்தங்கலை சேர்ந்த முத்துக்குமார் (41), கணேசன் (50), ஞானசேகரன் (49), நாகார்ஜுன் (29), ராஜசேகர் (36), அந்தோணி ராஜ் (26), ஜெயசேகர் (30), நாரணாபுரத்தை சேர்ந்த முனியசாமி (32), முத்துராமலிங்கபுரம் காலனியை சேர்ந்த சங்கிலி திருமுருகன் (27), அருள் குமார் (35) ஆகிய 11 பேரை போலீஸார் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com