ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அரசு தடுத்து நிறுத்திட வேண்டும் - தங்கம் தென்னரசு

கடற்பகுதியில் இயற்கை வளங்களையும் மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் கடுமையாகப் பாதிக்கும்.
Thangam Thenarasu
Published on

முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை அருகே கடற்பகுதியில் நான்கு ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கும் இந்தியன் ஆயில் கார்ப்பொரேஷன் நிறுவனத்தின் முயற்சி கவலை அளிக்கின்றது.

கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான கழக ஆட்சியின்போது, தமிழ் நாட்டு வேளாண் பெருங்குடி மக்கள், பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழலின் நலன் கருதி தமிழ்நாட்டில் எந்த வகையிலான ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கும் அனுமதி இல்லை என்ற உறுதியான நிலைப்பாட்டை மேற்கொண்டோம். ONGC நிறுவனம் இராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் இருப்பிற்கான ஆய்வு மேற்கொள்ள விண்ணப்பித்தபோதுகூட அந்த முயற்சியினைத் தொடக்கத்திலேயே தடுத்து நிறுத்திடும் வகையில் மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் (State Environment Impact Assessment Authority- SEIAA) இத்திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதியினை வழங்கக்கூடாதெனத் தக்கவகையில் அறிவுறுத்தினோம்.

அதேபோல், கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை அருகே கடற்பகுதியில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள இந்த ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கும் புதிதாகப் பதவியேற்றிருக்கும் அரசு தனது உறுதியான எதிர்ப்பைத் தொடர்ந்து நிலைநிறுத்த வேண்டும். மேலும், கடற்பகுதியில் இயற்கை வளங்களையும் மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் கடுமையாகப் பாதிக்கும். இத்திட்டத்திற்கு மாநில கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம் (Tamil Nadu State Coastal Zone Manangement Authority) எத்தகு அனுமதியும் வழங்கக்கூடாது என தமிழ்நாடு அரசு உரிய வகையில் அறிவுறுத்தி தடுத்து நிறுத்திட வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்துகின்றது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com