புனித அந்தோணியர் ஆலய திருவிழாவில் சீர்வரிசை எடுத்து சென்ற இந்துக்கள்- தேர்பவனியில் திரளானோர் பங்கேற்பு

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள், இந்துக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
புனித அந்தோணியர் ஆலய திருவிழாவில் சீர்வரிசை எடுத்து சென்ற இந்துக்கள்- தேர்பவனியில் திரளானோர் பங்கேற்பு
Published on

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த புகழ்பெற்ற புனித அந்தோனியார் தேவாலயம் உள்ளது. வருடந்தோறும் தேர்பவனி திருவிழா விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்தாண்டுக்கான விழா கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. நேற்று விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேர்பவனி நடைபெற்றது.

மின்னொளி அலங்காரத்தில் இசை வாத்தியம் முழங்க வாணவேடிக்கைகளுடன் ஏராளமான கிறிஸ்தவர்கள் படை சூழ புனித அந்தோணியார், புனித செபஸ்தியார், புனித மிக்கேல் சம்மனசு, புனித சவேரியார் ஆகியோரின் உருவ சிலைகள் வைக்கப்பட்ட மின்னொளி அலங்கார வருடாந்திர தேர் பவனி நடைபெற்றது.

அந்தோனியார் ஆலயத்தில் தொடங்கிய தேர்பவனியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். மின்னொளி அலங்காரத்தில் ஜொலித்த தேர்கள் கமுதி- சாயல்குடி சாலையின் வழியாக சென்றது. அப்போது மத நல்லிணத்திற்கு எடுத்துக்காட்டாக தேர்பவனியில் அந்த பகுதியை சேர்ந்த இந்துக்களும் கலந்து கொண்டனர்.

தங்கள் வீட்டின் வழியே சென்ற தேருக்கு இந்துக்கள் தாம்பூல தட்டில் பூமாலை, சந்தனமாலை, பொறி கடலை, உப்பு, மெழுகு வர்த்தி, மிளகு உள்ளிட்ட பூஜை பொருட்களை சீர்வரிசையாக கொண்டு சென்று வரவேற்று வழிபாடு செய்தனர்.

இரவு முழுவதும் நடைபெற்ற மின்னொளி அலங்கார தேர்பவனி அதிகாலையில் மீண்டும் அந்தோனியார் ஆலயத்திற்கு வந்தடைந்தது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள், இந்துக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com