அங்கிட் திவாரிக்கு இடைக்கால ஜாமீன் வழங்க முடியாது: ஐகோர்ட் மதுரை கிளை மறுப்பு

தற்போது நான் 70 நாட்களுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டு உள்ளேன். மனுதாரர் மீதான வழக்கு விசாரணைக்கு மட்டுமே சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.
அங்கிட் திவாரிக்கு இடைக்கால ஜாமீன் வழங்க முடியாது: ஐகோர்ட் மதுரை கிளை மறுப்பு
Published on

மதுரை:

திண்டுக்கல் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றும் டாக்டர் சுரேஷ்பாபுவிடம் ஒரு வழக்கு சம்பந்தமாக அவருக்கு சாதகமான நடவடிக்கை எடுக்க ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்ற விவகாரத்தில் மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரியை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்து உள்ளனர்.

இவர் ஏற்கனவே தனக்கு ஜாமீன் கேட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் ஜாமீன் கோரி, மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், சட்டத்துக்கு புறம்பாக தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் என்னை கைது செய்து உள்ளனர்.

தற்போது நான் 70 நாட்களுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டு உள்ளேன். எனக்கு ஜாமீன் அளிக்கும்பட்சத்தில் உரிய நிபந்தனைகளை பின்பற்றி ஒத்துழைப்பேன். எனவே எனக்கு ஜாமீன் அளித்து உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி விவேக் குமார் சிங் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில் வக்கீல் திருவடிக்குமார் ஆஜராகி, மனுதாரர் மீதான வழக்கு விசாரணைக்கு மட்டுமே சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது. அதனால் தான் இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை.

இந்த வழக்கில் குற்றபத்திரிகை தயாராக உள்ளது. இந்த சமயத்தில் மனுதாரருக்கு ஜாமீன் அளித்தால் அது சம்பந்தமாக சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பக்கூடும் என்று வாதாடினார்.

பின்னர் ஆஜரான மனுதாரர் வக்கீல், சுப்ரீம் கோர்ட்டு முடிவு எடுக்கும் வரை மனுதாரருக்கு இடைக்கால ஜாமீன் அளிக்க வேண்டும் என கோரினார். விசாரணை முடிவில், மனுதாரர் தரப்பு கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, இந்த வழக்கின் விசாரணையை மார்ச் மாதம் 12-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com