

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பேரூராட்சி வேட்டையன்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
பயன்படாத பள்ளி கட்டிடத்தில் வைக்கப்பட்டிருந்த பள்ளி புத்தகம், மாணவர்களுக்கு வழங்கப்பட இருந்த ஷூக்களை அப்புறப்படுத்த 10-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களை வைத்து பள்ளி தலைமை ஆசிரியை சுத்தம் செய்ய சொல்லியதாக கூறப்படுகிறது.
மாணவர்களுக்கு வழங்கப்படாமல் இருந்த ஏராளமான ஷூக்கள் மாணவர்களை வைத்து குப்பையில் கொட்டப்பட்டது. மேலும் பழைய புத்தகங்களை தீ வைத்து எரித்து அதன் கழிவுகளையும் மாணவர்களை வைத்து அப்புறப்படுத்தப்பட்டது. மாணவர்கள் குப்பைகள் அகற்றுவதை பொதுமக்கள் வீடியோ எடுத்தனர்.
மேலும் அவர்கள் இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியை செல்வியிடம் கேட்டபோது, மழையினால் பள்ளியில் வைத்திருந்த புத்தகங்கள் நனைந்து வீணாய் போய் விட்டன. அதனால் எரித்தேன் எனவும், புத்தகங்களை எரிக்கவில்லை. அட்டை பெட்டியை தான் எரித்தேன் எனவும் அரசு மாணவர்களுக்காக விலை இல்லாமல் கொடுத்த ஷூக்கள் கால்களில் அணிய முடியவில்லை அதனால் மாணவர்கள் வாங்கவில்லை. அதனால் தூக்கி எரிந்தேன் என மழுப்பலான பதில் அளித்தார்.
இதற்கிடையில் மாணவர்கள் குப்பைகளை அகற்றும் வீடியோ வைரலானது. இதையடுத்து மாவட்ட கல்வி அலுவலர் செந்தில்குமார் வேட்டையன்பட்டி அரசு பள்ளிக்கு சென்று ஆய்வு நடத்தி ஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொண்டார். அப்போது அவர் மாணவர்களை கூப்பிட்டு விசாரணை செய்தார்.
பின் தலைமை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் இருவரையும் மாணவர்களை வைத்து வேலை வாங்கலாமா? படிக்க வருகிறார்களா? வேலை பார்க்க வருகிறார்களா? பெற்றோர்கள் மாணவர்கள் வேலை பார்ப்பதை பார்த்தால் அவர்களின் மனநிலை எப்படி இருக்கும்? என கேள்வி எழுப்பினார்.
மேலும் ஒவ்வொரு மாணவர்களை அழைத்து விசாரித்தார். அப்போது தந்தை இல்லை என ஒரு மாணவன் சொல்ல அதற்கு கல்வி அதிகாரி இந்த மாதிரி பிள்ளைகள் தான் அரசு பள்ளியில் படிக்கிறார்கள். இந்த குழந்தையை நீங்கள் நல்ல நிலைமைக்கு உருவாக்க வேண்டும். ஆனால் உங்களுக்கு எப்படி மனசு வந்தது வேலை வாங்க, நாம் கை நிறைய சம்பளம் வாங்குகிறோம். வேலைக்கு ஆள் போட்டு செய்யலாமே என கண்டித்தார். தொடர்ந்து மாணவர்களை வைத்து குப்பைகளை அகற்றிய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தேவகோட்டை கல்வி மாவட்ட கல்வி அலுவலர் செந்தில்குமார் தெரிவித்தார்.
இதற்கிடையில் வேட்டையன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செல்வி காப்பாராப்பட்டி நடுநிலைப் பள்ளிக்கு இடமாற்றம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.