

சென்னையில் மேயர் பிரியா, திரு.வி.க.நகர் த.வெ.க. எம்.எல்.ஏ. பல்லவி ஆகியோர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் நடந்த அதிகார மோதல் பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்தது.
பின்னர், நிகழ்ச்சி முடிந்து எம்.எல்.ஏ. அலுவலகத்தில் இருந்த பல்லவியிடம் நடந்த சம்பவங்கள் பற்றி கேட்டபோது கூறியதாவது:-
இன்று நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கு முறைப்படி எனக்கு அழைப்பிதழ் கொடுத்திருந்தார்கள். எனக்கு குழந்தை பிறந்து 10 நாட்கள் தான் ஆகிறது.
3 மாதங்கள் ஓய்வெடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள். ஆனாலும் எனக்கு விடுக்கப்பட்ட முதல் அரசு நிகழ்ச்சி என்பதாலும், கல்வி சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி என்பதாலும் வருவதற்கு ஒப்புக் கொண்டேன்.
ஆனால் ஆட்சி மாறியப் பிறகு எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருந்த மேயர் பிரியா நான் வருவதாக இருந்ததால் அவரும் வந்துவிட்டார். கவுன்சிலர்கள், நிலைக்குழுத் தலைவர்கள் ஆகியோரை வைத்துக் கொண்டு என்னை அசிங்கப்படுத்திவிட்டார்.
ஆனால் நான் இதை அசிங்கமாக கருதவில்லை. ஏனெனில் குழந்தைகளுக்கு கல்வி கொடுக்கும் திட்டம். எனவே யார் திறந்தாலும் பிரச்சினை இல்லை. நல்லது நடக்கட்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். எனவே எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் அங்கிருந்து நகர்ந்துவிட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.