ஹார்டு டிஸ்க் திருட்டு விவகாரம்- ஒப்பந்த ஊழியரான ஒருவர் கைது

மின்வாரிய தலைமை அலுவலகத்தில் இருந்து முக்கிய ஆவணங்கள் அடங்கிய 18 ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்டு இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஹார்டு டிஸ்க் திருட்டு விவகாரம்- ஒப்பந்த ஊழியரான ஒருவர் கைது
Published on

சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படும் மின் திட்டங்கள் மற்றும் பயன்பாடுகள் ஆகியவற்றின் விவரங்களும், புதிதாக எந்தெந்த பகுதிகளுக்கு டிரான்ஸ்பார்மர்கள் மற்றும் மின்சார வசதிகள் மேற்கொள்ளப்படுகிறது என்பது உள்பட அனைத்து மின்வாரிய தகவல்களும் இங்கு கம்யூட்டர்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு சேமித்து வைக்கப்படுவது வழக்கம்.

இந்த நிலையில், மின்வாரிய தலைமை அலுவலகத்தில் இருந்து முக்கிய ஆவணங்கள் அடங்கிய 18 ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்டு இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக சிந்தாதரிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்ட புகார் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கில் அரக்கோணத்தை சேர்ந்த கோபிநாத் என்பவரை சிந்தாதிரிப்பேட்டை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், 11 மாத காலமாக மின்துறை தலைமை அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக கோபிநாத் வேலை பார்த்து வந்துள்ளார் என்றும் பணத்திற்காக திருடியதாக கோபிநாத் கூறியதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திருடிய ஹார்டு டிஸ்க்குகளை வெளியில் விற்றுவிட்டதாக கோபிநாத் கூறியுள்ளதால், யாருக்கு விற்பனை செய்தார்? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com