

சேலத்தில் பாலியல் புகாரில் த.வெ.க. பிரமுகரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். விசாரணையில் அவர் பல பெண்களுடன் பழகி ஆபாச வீடியோ எடுத்து மிரட்டியது அம்பலமாகியுள்ளது.
சேலம் அருகே நெய்க்காரப்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 40). த.வெ.க. பிரமுகரான இவர் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவர் மீது பாலியல் புகாரை முன்வைத்து பெண் ஒருவர் நேற்று ஆடியோ ஒன்றை வெளியிட்டார்.
அதில், நான் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறேன். குடும்ப செலவுக்காக நான் சிலரிடம் கடன் வாங்கி உள்ளேன். அந்த கடனை திருப்பி கொடுக்க முடியாமல் கஷ்டப்பட்டேன். அப்போது நெய்க்காரப்பட்டியை சேர்ந்த ஒருவர் எனக்கு அறிமுகமானார். மேலும் அவர், எனக்கு நிதி நிறுவனங்களிடம் இருந்து கடன் வாங்கி கொடுத்து உதவி செய்தார். இதன் மூலம் அவருக்கும், எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருக்கமாக இருந்தோம்.
இந்த நிலையில் அவரது செல்போனை பார்த்தபோது, அதில் பல பெண்களின் ஆபாச வீடியோ இருந்ததை கண்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். உடனடியாக நான் என்னுடைய வீடியோக்களை அழித்து விட்டேன். அதன்பிறகு அவருடன் பழகுவதை நிறுத்தி கொண்டேன். இதனால் சந்தேகமடைந்த அவர் எனக்கு போன் செய்து, உன்னுடைய ஆபாச வீடியோ என்னிடம் உள்ளதால் நான் கூப்பிடும்போது நீ வர வேண்டும் என்று மிரட்டி வருகிறார். என்னை போல் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசினார்.
இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஆடியோ சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரியின் கவனத்துக்கு வந்தது.
இதையடுத்து இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார். அதன்பேரில் மணி கண்டனை கொண்டலாம்பட்டி போலீசார் பிடித்து விசாரித்தனர்.
மேலும் அவரது செல்போனை போலீசார் பறிமுதல் செய்து ஆய்வு செய்தபோது, அதில் பல பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருந்தது. இதன் மூலம் மணிகண்டன் பல பெண்களுடன் பழகி அவர்களை பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ எடுத்து மிரட்டியதும் தெரியவந்தது.
இதற்கிடையே அவரால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கொண்டலாம்பட்டி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.